ஆஸ்திரேலியாவின் புதிய சட்ட முன்மொழிவு புலம்பெயர்ந்தவர்களை குறிவைக்கிறதா?

வெள்ளி அக்டோபர் 15, 2021

சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள ‘புலம்பெயர்வு மற்றும் குடியுரிமைச் சட்டத்திருத்தம்’(Migration and Citizenship Legislation Amendment (Strengthening Information Provisions) Bill, விசா ரத்து சிக்கல்களில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. 

ரகசியமான ஆதாரத்தின் அடிப்படையில் புலம்பெயர்ந்த ஒருவரின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்ய இச்சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. இதனால் புலம்பெயர்ந்தவர்களுக்கு நீதி மறுக்கப்படக் கூடிய நிலை உள்ளதாக உரிமைகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இச்சட்டத்திருத்தத்தின் படி, குணநலன் அடிப்படையில் புலம்பெயர்ந்த ஒருவருக்கு விசா மறுக்கப்படும் பொழுது, அல்லது ரத்து செய்யப்படும் பொழுது எந்த ஆதாரத்தின் கீழ் அம்முடிவினை ஆஸ்திரேலிய அரசு எடுத்தது என்பதைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. இந்த சட்டத்திருத்தம், தற்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் குழுவின் முன்பு உள்ளது. 

இத்திருத்தத்தால் விசா ரத்து செய்யப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய ஆபத்தும் அல்லது நாடற்றவர்களாக இருந்தால் விசாரணை நடத்தப்படாமல் காலவரையின்றி தடுத்து வைத்திருக்க கூடிய ஆபத்தும் இருப்பதாக கவலைகள் முன்வைக்கப்படுகின்றன. 

கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை குணநலன் அடிப்படையில் விசா ரத்து செய்யப்படுவது ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது. 2012-13ல் 139 ஆக இருந்த ரத்து எண்ணிக்கை 2016-17ல் 1,278 எனும் உச்சத்தினை தொட்டிருக்கிறது. அதே சமயம், 2020-21ல் இந்த எண்ணிக்கை 946 ஆக உள்ளது. 

"தஞ்சம் கோருவோர், அகதிகள் மற்றும் நாடற்ற நபர்களுக்கு விசா மற்றும் குடியுரிமை வழங்கும் செயல்முறையின் அனைத்து கட்டங்களிலும் முழு நடைமுறை பாதுகாப்புகள் மற்றும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம்" என ஆஸ்திரேலிய சட்டத்திருத்தத்தின் ரகசியத்தன்மை குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.