ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 இலங்கையர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

புதன் ஜூன் 29, 2022

 இலங்கையின் கிழக்கு கடல் பகுதியான மட்டக்களப்பிலிருந்து  ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த 54 பேரில் 52 பேர் ஆண்கள், 02 பேர் பெண்களாவர். இவர்கள் ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.      

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. இலங்கை காவல்துறையின் கணக்குப்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 91 இலங்கையர்கள் இதுவரை இலங்கைக்கு

நாடுகடத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையின் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருக்கிறார்.