‘ஆடி“ போக ஆடிப்போகும் மஹிந்த!

வெள்ளி ஜூலை 26, 2019

“ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.  

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.   

ஐ.தே.க பெரும்பாலும், சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் வாய்ப்புகள் தென்படுகின்றன. கட்சிக்குள் அதற்கு முரணான கருத்துகள், நிலைப்பாடுகள் இருந்தாலும், சஜித்தை முன்னிறுத்தும் தரப்புகள் வலுப்பெற்று வருகின்றன.  

அடுத்த மாதம் பெரும்பாலும் ஐ.தே.கவின் வேட்பாளர் யார் என்பது ஓரளவுக்கு இறுதி செய்யப்பட்டு விடும். ஏனென்றால், ஐ.தே.கவுக்கு இப்போது போட்டியாகவுள்ள மஹிந்த தரப்பும், அடுத்த மாதமே ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போகிறது,  

ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதால், ஆவணியில் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் என்று, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  

சோதிடத்தை நம்பிக் கெட்ட அரசியல் தலைவர்களில் மஹிந்த ராஜபக்‌ஷ முக்கியமானவர். சோதிடரின் பேச்சை நம்பிய அவர், 2015இல் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தப் போய், ஆட்சியைப் பறிகொடுத்திருந்தார்.  

இப்போதும் கூட அவர், ஆடி மாதத்தில் முக்கிய முடிவை அறிவிக்கத் தயாராக இல்லை. அதனால் தான், ஓகஸ்ட் 11ஆம் திகதி, தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போகிறார்.  

பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பையும் அவர் அன்றைய தினம், ஏற்றுக் கொள்ளப் போகிறார்.  

ஆனால், இந்தத் தலைமைப் பதவி, அவரிடம் எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பது, ஜனாதிபதி தேர்தல் முடிவைப் பொறுத்தே அமையப் போகிறது.  

ஏனென்றால், ஒரு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர், அந்தக் கட்சியில் இன்னொரு தலைவரின் கீழ் இருந்து முடிவுகளை எடுக்கும் நிலையில் அவர் இருப்பாரா என்பது சந்தேகம்.  

இதற்கு முன்னர், சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் சுதந்திரக் கட்சி இருந்தபோது, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும், கட்சித் தலைமையைப் பிடுங்கிக் கொண்டார். அதுபோலவே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்து, தலைவர் பதவியைப் பறித்துக் கொண்டார்.  

மஹிந்த நிறுத்தப்போகும் வேட்பாளர், அவரிடம் இருந்து, பொதுஜன பெரமுன தலைவர் பதவியைப் பறிக்கமாட்டார் என்று எவ்வகையிலும் நம்பமுடியாது.  

எனவே தான், ஓகஸ்ட் 11ஆம் திகதி மஹிந்தவின் கைக்கு வரப்போகும் பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவி, எவ்வளவு காலத்துக்கு, அவரது கையில் இருக்கப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.  

பொதுஜன பெரமுனவில், எல்லாமே மஹிந்த ராஜபக்‌ஷ தான். அவர் நினைத்தது தான் அங்கு நடக்கிறது. பிறகெப்படி, அவரைக் கட்சித் தலைமையில் இருந்து தூக்க முடியும்? என்ற கேள்வி யாருக்காவது எழலாம்; அது நியாயமானதும் கூட.   

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ தங்காலைக்குப் போய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். 

அவரை, மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்து, பலமானதோர் அணியைக் கட்டியெழுப்பியவர்கள் அவரது ஆதரவாளர்கள் தான்.  

மஹிந்தவுக்கு நெருக்கமாக இருந்த சுதந்திரக் கட்சித் தலைவர்கள் மாத்திரமன்றி, அதன் கூட்டுக் கட்சிகளாக இருந்த கட்சிகளின் தலைவர்களும் கூட, மஹிந்தவின் மறுஅரசியல் பிரவேசத்தில் முக்கியமான பங்கு வகித்தனர். அவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷவைத் தீவிரமாக ஆதரித்தாலும், அவருக்குப் பின்னால் செல்லத் தயாரில்லை.  

விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில போன்ற ஏனைய கட்சிகளின் தலைவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷவைத் தலைவராக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் தமது கட்சிகளை விட்டு விலகி, அல்லது அவற்றைக் கலைத்து விட்டு மஹிந்தவுடன் இணையவில்லை.  

அவர்கள் தமது கட்சியில் இருந்து கொண்டே, மஹிந்தவைப் பலப்படுத்தி, அரசியலில் நிலைக்க வைப்பதற்குக் காரணம், தமது அரசியல் இருப்பைக் கவனத்தில் கொண்டு தான்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் சரி, அதனுடன் கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகளிலும் சரி, மைத்திரிபால சிறிசேன மீது அதிருப்தி கொண்டிருந்தவர்களுக்கு, ஒரு சரியான தலைமை இருக்கவில்லை.  

அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஆளுமையுள்ள ஒருவர் இருந்திருந்தால், மஹிந்தவின் மீள்வருகை சாத்தியப்பட்டு இருக்காது. அந்த மாற்றுத் தலைவரே எழுச்சி பெற்றிருப்பார்.  மஹிந்தவுக்குப் பின்னரான வெற்றிடத்தை நிரப்பும் ஒருவர் இல்லாமல் போனதால் தான். 

மீண்டும் அவரைக் கொண்டு வந்து நிரப்பும் நிலை அவரது அணியினருக்கு ஏற்பட்டது.  
மஹிந்த ராஜபக்‌ஷ என்ற விம்பத்தை வைத்தே, அரசாங்கத்தை எதிர்க்க முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்; அதையே செயற்படுத்தினார்கள். அது பொதுஜன பெரமுனவின் உருவாக்கத்திலும், உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றியையும் பெற்றுத் தந்தது.  

அதன் தொடர்ச்சியாகத் தான், அவர்கள் மஹிந்த ராஜபக்‌ஷவை, உச்சத் தலைவராகக் கொண்டாடியதுடன், அவர் கைகாட்டுகின்றவரே எமது வேட்பாளர் என்றும் அறிவித்தனர்.  
மஹிந்த ராஜபக்‌ஷ யாரைக் கை காட்டுகிறாரோ, அவரே ஜனாதிபதி வேட்பாளர் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அப்படி இருக்கிறார்களா என்றால், அது பொய் என்றே கூற வேண்டும்.  

ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஒற்றுமை இருந்தாலும், அது யார் என்பதைத் தீர்மானிப்பதில் குழப்பங்கள் இருக்கின்றன.  

சமல், கோட்டா, மாத்திரமன்றி ஷிரந்தியின் பெயர் கூட அடிபட்டது. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, கோட்டாபய ராஜபக்‌ஷவைத் தெரிவு செய்வதில் அவ்வளவாக உடன்பாடு இல்லாவிட்டாலும், அவரையே நிறுத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார்.  

கோட்டாபய ராஜபக்‌ஷ வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. கட்சியின் தலைவர்களிடம் தமது முடிவு பற்றி அறிவித்திருக்கிறார். குமார வெல்கம அண்மையில் அதனைக் கூறியிருந்தார்.  

ஆனாலும், கடந்த வாரம் மஹிந்த ராஜபக்‌ஷ, தான் கோட்டாவை வேட்பாளராக நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்றும், தாம் நிறுத்தப்போகும் வேட்பாளர் கோட்டா தான் என்று உறுதிப்படுத்த முடியாது எனவும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.  

கோட்டாபய ராஜபக்‌ஷ, இப்போது பொதுஜன பெரமுனவின் செல்வாக்குப் பெற்ற தலைவராக மாறி வருக்கிறார். மஹிந்தவையும் மீறி அவர் எழுச்சி பெறத் தொடங்கி இருக்கிறார்.  

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர், கோட்டா போன்ற ஒருவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கருத்து சிங்கள- பௌத்தர்களிடம் ஊறியிருக்கிறது.   

அது மஹிந்தவின் கரத்தைப் பலப்படுத்தியிருப்பதாகப் பலர் நினைத்தாலும், அது பொய். மஹிந்தவின் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது நிலைமை.  கோட்டா இப்போது பலமடைந்திருக்கிறார். அவரையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.  

கம்பஹா மாவட்ட கட்சிக் கூட்டத்தில், கோட்டாபய ராஜபக்‌ஷவைப் போட்டியில் நிறுத்த வேண்டும் என்று, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  

மஹிந்தவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான பிரசன்ன ரணதுங்க, இதுபற்றிக் கூறும் போது, “கோட்டாபய ராஜபக்‌ஷ எமது வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவரே, சிறந்த வேட்பாளர் என்பது எங்கள் ஒருமித்த முடிவு. ஓகஸ்ட் 11ஆம் திகதி, எமது வேட்பாளர் யார் என்பதை, மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிக்கவுள்ளார். நாங்கள் சொல்வதை அவர் கேட்பார் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.  

மஹிந்த கை காட்டுகிறவர் தான், மொட்டுக் கட்சியின் வேட்பாளர் என்று கூறியவர்களில் பிரசன்ன ரணதுங்கவும் ஒருவர். ஆனால் இன்று, அவர், “நாங்கள் சொல்வதை, அவர் கேட்பார் என்று நம்புகிறோம்” என்று மாறியிருக்கிறார்.  

அதுபோல, கோட்டாவை வேட்பாளராக நிறுத்தாவிடின், யாரை நிறுத்தினாலும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று றியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் கூறியிருக்கிறார்.  

மஹிந்தவின் வழிநடத்தலில் உள்ளவர்கள், இப்போது, மஹிந்தவை வழிநடத்த முற்படுகின்றனர். இது மஹிந்தவின் எதிர்காலத்துக்கான முதல் அச்சுறுத்தல்.  

மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் போட்டியான ஒரு தலைவரை, அவர்கள் தெரிவு செய்யவில்லைத் தான். ஆனால், மஹிந்த விரும்புகின்ற ஒருவரா அவர் என்பதில், சந்தேகம் உள்ளது.  மஹிந்தவை விடவும் கோட்டாவின் செல்வாக்குக்குப் பலம் அதிகம் என்று, அவரது கட்சியினரே நம்பத் தொடங்கியுள்ளனர் போலும்.  

மஹிந்தவின் செல்வாக்குச் சரியத் தொடங்கியுள்ளதற்கு, ஒக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பு, தோல்வியில் முடிந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த தரப்பு வெற்றி பெற்றாலும் அது மஹிந்தவின் வெற்றியாக இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கும்.   

ஏனென்றால், அந்த வெற்றி, மஹிந்தவின் எதிர்கால அரசியல் திட்டங்களை நிச்சயமற்றதாக்கக் கூடும். அவ்வாறான வெற்றி, எவ்வாறு அவரது வெற்றியாக அமைய முடியும்? 

  • கே. சஞ்சயன்