அதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்திய தம்பதியர்!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

கொரோனா பரவாமல் இருக்க இந்த சாலை வழியாக செல்லவேண்டாம் என கூறிய சீன அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கணவன், மனைவிக்கு ஒராண்டு நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது. 

இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க சீனாவில் உள்ள பல்வேறு நகரங்கள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. 

சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ரெயில், பஸ் என அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்நாட்டின் ஹிஜியங் மாகாணத்தில் உள்ள லின்ஹாய் நகரத்திற்குள் நுழையும் முக்கிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், அந்த நகரில் வசித்துவந்த தம்பதிகள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு விரைவாக செல்லவேண்டும் என முடிவெடுத்து அனுமதிக்கப்பட்ட சாலையில் செல்லாமல் மூடப்பட்ட சாலையில் செல்ல முற்பட்டனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கொரோனா வைரஸ் தடுப்பு அதிகாரி ஒருவர் தம்பதிகளை அந்த சாலை வழியே நகருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

 

தாக்குதல் நடத்திய தம்பதிகள் கோர்ட்டில் நிற்கும் காட்சி

 

இதனால், தம்பதிகளுக்கு அதிகாரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவரும் மனைவியும் இணைந்து அதிகாரியை சரமாரியாக தாக்கினர். 

அதிலும், குறிப்பாக அந்த ஆண் நபர் அதிகாரியின் தலை, கைகள், கால்கள் என உடல் முழுவதும் செங்கல்லால் கடுமையாக தாக்கினார். 

இந்த சம்பவம் அந்த சாலை சோதனைசாவடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிகாரியை தாக்கிய தம்பதிகள் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அதிகாரியை செங்கல்லால் கடுமையாக தாக்கிய ஜீய் மற்றும் அவரது மனைவி ஷாவ் ஆகிய இருவரையும் தாக்குதல் நடைபெற்ற அன்றே அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட தம்பதிகள் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிசிடிவி விடியோவின் அடிப்படையில் தம்பதிகள் குற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தார். 

இதையடுத்து அதிகாரியை கடுமையாக தாக்கிய ஆண் நபர் ஜீய்க்கு ஒரு வருடம் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும், அவரது மனைவி ஷாவுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.