அதிகாரம் இல்லாத கண்காணிப்பு எதற்கு?

திங்கள் மார்ச் 11, 2019

மன்னார்ப் புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும் புக்கூடுகள் சுமார் 300 - 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற காபன் பரிசோதனை அறிக்கை ஒரு பெரும் உண்மையை எடுத்துரைக்கிறது.

அதாவது இலங்கை அரசின் அதிகாரத் துக்குட்பட்டு எது நடந்தாலும் அது தமிழ் மக்களுக்கு எப்போதும் எதிராகவும் பாதகமாக இருக்கும்.

அந்த அடிப்படையில் தான் மன்னார்ப் புதை குழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான காபன் பரிசோதனை அறிக்கையும் மிகத் தெளிவாக திட்டமிட்ட அடிப்படையில் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளது.

மன்னார் புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் விவகாரம் உலகறிந்த சம்பவம்.

இருந்தும் அதனைக்கூட 300 தொடக்கம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது என்றால், இலங்கை அரசின் ஏற்பாட்டில் பரிசோதனைகளும் விசாரணைகளும் நடந்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை எவரும் தீர்மானிக்க முடியும்.

தவிர, மன்னார்ப் புதைகுழி விவகாரம் குறித்த காபன் பரிசோதனை அறிக்கை அரசு டன் சேர்ந்து நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விழுந்த பலத்த அடியாகும்.

அதாவது அரசாங்கத்தைக் காப்பாற்றுகின்ற முயற்சியில் அதீதமாக கூட்டமைப்பு ஈடுபட்டபோதிலும் அரசின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது.

ஆக, எவ்வளவுதான் தமிழ்த் தரப்புகள் அரசுடன் இணங்கிச் சென்றாலும் அரசின் ஒவ்வொரு கட்டச் செயற்பாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது.

எனவே இணங்கிச் சென்று எமது உரிமைகளைப் பெறலாம் என்பது அடிப்படையிலேயே தோற்றுப் போகிறது.

இவை ஒருபுறமிருக்க, மன்னார்ப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மீது செய்யப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கையானது கண்கண்ட உண்மையைக் கூடத் தவிடுபொடியாக்கியுள்ளது.

நிலைமை இதுவெனில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விதித்த நிபந்தனைகளை நிறை வேற்றுவதற்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டால், அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படுமா என்ன?

எனவே கால அவகாசம் வழங்குவது என்பதைத் தடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மும்முரமாகச் செயற்பட வேண்டும்.

கால அவகாசம் கொடுக்காவிட்டால், இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் மேற்பார்வை இல்லாது போய்விடும் எனக் கூட்டமைப்புக் கூறுகிறது.

இவ்விடயத்தில் நாம் கேட்பதெல்லாம் நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் ஐ.நா அமைப்புக்கு இல்லையயன்றால், அதிகாரம் இல்லாதவர்களின் மேற்பார்வையால் என்ன நன்மை ஏற்படப் போகிறது.

ஆக, இலங்கை அரசு இணங்கிக் கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டால் மன்னார் எலும்புக்கூடுகளுக்கு நடந்த கதிதான் அதற்கும் நடக்கும்.

-வலம்புரி-