அதிகம் சம்பளம் பெறுபவர்கள் விரைவாக நிரந்தர வதிவிட விசா பெற புதிய திட்டம் !

வெள்ளி நவம்பர் 08, 2019

 ஆஸ்திரேலியாவில் அதிகம் சம்பளம் பெறும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கு விரைவாக நிரந்தர வதிவிட விசா வழங்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆண்டுக்கு 5000 பேர் என்ற கணக்கில் Fintech, Space, Advanced Manufacturing உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. 

“இத்திட்டத்தின் மூலம், உலகின் மிக உயர்ந்த திறன்கொண்ட குடியேறிகளை நாங்கள் குறிவைக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன். 

கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள துறைகளில் ஆண்டுக்கு 149,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 70 லட்சம் இந்திய ரூபாய்) மேலாக வருமானம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிடம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். இதற்காக இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி, சிலே, துபாய், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

1. விவசாய தொழில்நுட்பம் (AgTech)

2. நிதி தொழில்நுட்பம் (FinTech)

3. மருத்துவ தொழில்நுட்பம் ( MedTech)

4. இணைய பாதுகாப்பு (Cyber Security)

5. ஆற்றல் மற்றும் சுரங்கவேலை (Energy and Mining)

6. விண்வெளி மற்றும் மேம்பட்ட உற்பத்தி (Space and Advanced Manufacturing)

7. தகவல் மற்றும் தகவல் தொடர்பு (Quantum Information/Advanced Digital/ Data Science and ICT)

ஓர் ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்படும் ஒட்டுமொத்த குடியேற்ற எண்ணிக்கையான 160,000 யிலேயே இது கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.