ஆதிமனிதன் தமிழைதான் பேசி உள்ளான்;உறுதியுடன் கூறுவேன்-மயில்சாமி அண்ணாதுரை

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி  நடந்தது.இதில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய துணைத்தலைவரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை

பேசியதாவது:- இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் அறிவியல் தமிழையும் நான்காவதாக சேர்க்க வேண்டும்.அறிவியல் என்பது எண்ணம்,சொல்,செயல் ஆகியவற்றை கொண்டது.

புதிய கண்டுபிடிப்பு மட்டுமே மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும். கடந்த ஒரு வாரம் வரை இந்த பேரண்டம் 13 ஆயிரத்து 800 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக சொல்லப்பட்டது.

முதன்முதலில் ஆதிமனிதன் கல்லை பயன்படுத்துவதை கண்டுபிடித்தான்.அதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு.ஆதிமனிதன் தமிழைதான் பேசி உள்ளான் என்பதை உறுதியுடன் கூறுவேன்.  

சந்திரனில் சென்று ஆய்வு செய்த பல நாடுகளை சேர்ந்தவர்கள் நீர் இல்லை என்று கூறினார்கள்.

ஆனால், 40 ஆண்டுக்கு பிறகு நாம் முழு நிலவையும் ஆய்வு செய்து பல இடங்களில் நீர் இருப்பதை முதல் முறையிலேயே கண்டறிந்துவிட்டோம்.

அறிவியல் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும்,மனிதனின் அன்றாட வாழ்வில் கம்ப்யூட்டர்கள் மனிதன் மூளையை மழுங்கடித்து விடுகிறது. இன்று வரை மனிதன் தன் புத்தி கூர்மையால் வளர்ந்து இருக்கிறான்.

ஆனால், தற்போது கம்ப்யூட்டர் பயன்பாட்டால் சிந்திப்பது குறைந்துவிட்டது.தொழில்நுட்ப கோளாறால் தவறு ஏற்பட்டாலும், நாம் அதை உண்மை என்று நம்பிவிடுகிறோம்.கால்குலேட்டர் தவறான எண்ணை காண்பித்தாலும், கூகுல் மேப் தவறான வழியை காட்டினாலும் சிந்திக்காமல் நம்பும் நிலையில் மனிதர்கள் மாறிவிட்டார்கள்.

இது மனிதனை மீண்டும் கீழே கொண்டு செல்லும் வகையில் எச்சரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அவர் பேசினர்.