அதிமுக பொதுக்குழு! இபிஎஸ் மேல் முறையீடு-

புதன் ஜூன் 29, 2022

சென்னை- அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மயுத்தம்

அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நீண்ட நாட்களாகவே தர்மயுத்தம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கடும் எதிர்ப்பு

ஆனால் இந்த ஒற்றை தலைமைக்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்ய அதிமுக பொதுக்குழு கடந்த ஜூன் 23ல், சென்னையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

நிறைவேற்ற தடை

இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது, ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உத்தரவு

ஜூன் 22ல் விசாரணை நடத்தப்பட்டது. விடியவிடிய நடந்த விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டார்.

பொதுக்குழு

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்த நிலையில, நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு காரணமாக நிறைவேறாமல் போனது, இருந்தாலும் திட்டமிடப்பட்டபடி, பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

மேல்முறையீடு

அப்போது, 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

கேவியட் மனு 

அதன்படி நேற்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நேற்று கேவியிட் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு

இதில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மேல்முறையீடு செய்தாலும் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று ஓ.பி.எஸ் தரப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.