அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் இல்லை!

வியாழன் பெப்ரவரி 13, 2020

அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியில் விரிசல் இல்லை’ என்றும், ‘கூட்டணி தர்மத்தை எப்போதுமே மதிக்கிறோம்’ என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. கொடி நாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீ‌‌ஷ் உள்பட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவில், அலுவலக வளாகத்தில் இருந்த 118 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை விஜயகாந்த் ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தே.மு.தி.க. 20-ம் ஆண்டு கொடிநாளை உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருக்கிறோம். விஜயகாந்த் கொள்கைகளை பின்பற்றித்தான் அண்டை மாநிலங்களில் ஆட்சியை பிடித்து வருகிறார்கள். வீடு தேடி ரே‌‌ஷன் பொருட்கள் தரப்படும் என்ற வாக்குறுதியால்தான் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தார். லஞ்ச-ஊழலில்லாத ஆட்சி என்பதை முன்னிறுத்திதான் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்.

தேமுதிக கொடிநாள் விழாவில் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

சாதி-மதத்துக்கு அப்பாற்றப்பட்ட தலைவர் விஜயகாந்த் மட்டுமே. தே.மு.தி.க.வை மக்கள் ஆதரிக்காவிட்டால் ஏமாற்றம் மக்களுக்குத்தான்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தநிலையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘குட்ட குட்ட தே.மு.தி.க. குனிந்து கொண்டிருக்கிறது. நிமிர்ந்து எழுந்தால் யாரும் தாங்கமுடியாது’, என்று கருத்து தெரிவித்திருந்தேன். உடனே ‘கூட்டணிக்குள் விரிசல்’ என்றெல்லாம் பரப்பி விட்டார்கள். எங்கள் கூட்டணியில் என்றுமே விரிசல் இல்லை, வரவும் வராது. கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள் நாங்கள். இதை கூட்டணியில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும் என்ற உள்ளர்த்தத்தில் தான் அப்படி தெரிவித்தேன்.

நாற்புறமும் பிரச்சினைகள், சோதனைகள் வந்தாலும் துவண்டுவிடாத கட்சி தே.மு.தி.க. நமக்கு கடவுள் ஆசீர்வாதம் இருக்கிறது. சூழ்ச்சி, துரோகம் போன்ற ஆபத்துகள் சூளும் நேரங்களில் நம்மை கடவுள் காப்பாற்றுகிறார். அந்த கடவுள் அருளாலேயே விஜயகாந்த் மீண்டு, மீண்டும் வந்துவிட்டார். 2021-ம் ஆண்டில் மாபெரும் ஆட்சி அமைக்க, நம்மை வழிநடத்த விஜயகாந்த் இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.