அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

செவ்வாய் மே 12, 2020

சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்ற அ.தி.மு.க.வினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அமுக்கி மூச்சுத் திணற வைத்து தீவைத்து கொளுத்திய கொடூர சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.

கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பஸ்சை தர்மபுரியில் தீக்கிரையாக்கி மாணவியர் மூவரை கருக்கி கதறக் கதற கொன்றதற்கு காரணமானவர்கள் அ.தி.மு.க.வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.

சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.

ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவி உள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.