அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது- புகழேந்தி

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.

இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

எங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.

எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது. இவ்வாறு அவர் கூறினார்.