அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்! 232 பேர் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எதிரான பதவிநீக்க தீர்மானம், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது. வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக, கடந்த 6ம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது, அங்கு புகுந்த டிரம்பின் ஆதரவாளர்கள், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டொனால்ட் டிரம்பை, அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது நீண்ட விவாதம் நடைபெற்ற நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 232 எம்.பி.க்கள் பதவிநீக்கத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் அவருக்கு எதிராக வாக்களித்தனர். மசோதாவை எதிர்த்து 197 பேர் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அமெரிக்க அதிபர் வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்.
தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடைபெறுகிறது. அங்கு டிரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
இதனால் செனட் சபையில் குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தால், அவர் முழுமையாக பதவிநீக்கம் செய்யப்படுவார்.