அடம்பன் கொடியோடு புடலங்காய் கொடி திரண்டால்... 

புதன் ஜூன் 19, 2019

அசலாமு அலைக்கம்!

என்னடா இது, கிழவன் வழக்கமாக ‘வணக்கம்’ சொல்கிறவர், இன்றைக்கு அரபு மொழியில் புதுசாக ‘அசாலுமு அலைக்கம்’ என்று சொல்கிறார் என்று நீங்கள் மண்டையைப் பிய்க்கிறது எனக்கு விளங்குது.

எல்லாம் எங்கடை இசுலாமியத் தமிழ் சகோதரர்களுக்காகத் தான் பிள்ளையள். ரமடான் பண்டிகை போன கிழ
மையே முடிஞ்சுது என்றாலும், அவையளுக்கு வாழ்த்துச் சொல்கிறது எங்கடை கடமை தானே?

சரி, விசயத்துக்கு வாறன். போன கிழமை நான் ஸ்காபுறோ பக்கம் போயிருந்தன். எல்லாம் காரியத்தோடை தான். ஊர் துளவாரம் ஏதும் அறியலாம், பிறகு அதை ஊர் ஊராகக் கொண்டோடலாம் என்று தான் அங்கை நான் போனேன். ஆனால் அங்கை இருக்கிற தமிழ்க் கடைகளில் எல்லாம் ஒரே பரபரப்பு. எனக்கென்றால் ஒன்றுமே விளங்கவில்லை.

என்னதான் நடக்குது என்று பார்ப்பம் என்று கிட்டப் போனால், எங்கடை ஆட்கள் எல்லாம் முசுலிம் அரசியல்வாதிகளை புகழ்ந்து கொண்டிருந்தீனம்.

அந்த இடத்தில் நின்ற என்னை மாதிரி ஒரு நைன்ரி சொல்லிச்சுது, ‘ஒற்றுமை என்றால் என்ன என்பதை உந்த முசுலிம் அரசியல்வாதிகளைப் பார்த்துத் தான் எங்கடை தமிழ்ச் சனம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று.
உதைக் கேட்டவுடன் எனக்கு சிரிப்புத் தான் வந்திச்சுது. ஒரு பக்கத்திலை கொஞ்சம் கவலையாகவும் தான் இருந்தது. பின்னை என்ன பிள்ளையள், எவ்வளவு ஒற்றுமையாக இருந்த இனம் நாங்கள்? எங்கடை தம்பி பிரபாகரன் ஒரு வார்த்தை கூறினால் யாராவது மறு பேச்சுப் பேசியிருப்பமே?

அந்த நாட்களில் எங்கடை ஒற்றுமையைப் பார்த்துச் சிங்களவன் மட்டுமில்லை இலங்கையில் இருக்கிற தமிழ் பேசுகிற முசுலிம் சமூகதத்தின்ரை அரசியல்வாதிகள் கூட திகைச்சுப் போய் நின்றவையள்.

உங்களுக்கு ஞாபகம் இருக்குதோ எனக்குத் தெரியாது பிள்ளையள். 2002ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கினதும், தங்களுக்கும் பேச்சுவார்த்தையில் சமதரப்பு தரப்பட வேண்டும் என்று முசுலிம் அரசியல்வாதிகள் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றவையள்.

உதைப் பார்த்துப் போட்டு எங்கடை தேசியத் தலைவர் சொன்னவர், ‘அவையளும் சமதரப்பாக வரலாம், ஆனால் அவையள் எல்லோரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறதாலை, அரசாங்கத்தின்ரை தூதுக் குழு அங்கத்தவர்களாகவே பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்ற வேண்டும்’ என்று.

அவ்வளவு தான். பேச்சுவார்த்தையில் முசுலிம் சமூகத்தை யார் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று அவையள் தங்களுக்குள்ளை மல்லுக்கட்டத் தொடங்கி விட்டினம். தான் தான் முசுலிம் மக்களின்ரை தனிப் பெரும் தலைவன் என்று ஒரு பக்கத்திலை கக்கீம் மாத்தையா பறை தட்ட,உதெல்லாம் சரிப்பட்டு வராது, தான் தான் அசுரப்பின்ரை பட்டத்து ராணி என்று சொல்லி பேரியல் அசுரப் சன்னதம் ஆடினவா.

111

இன்னொரு பக்கத்திலை ஜிகாத் ஆயுதக் குழுவை இயக்கிக் கொண்டிருந்த அத்தாவுல்லா, கக்கீம் மாத்தையாவின் ஆட்களின் நையப்புடைச்சு, தான் ஒரு பெரிய மாலீக் கபூர் என்கிற மாதிரி சண்டித்தனம் செய்து கொண்டிருந்தவர். இப்படியே ஆளாளுக்கு அடிபட, ரிசாத் பதியுதீன் இன்னொரு பக்கமாய் கிளம்பிப் போய் தானும் ஒரு தனிப் பெரும் முசுலிம் தலைவர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தவர்.

கடைசியில் பேச்சுவார்த்தையில் முசுலிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யிறதுக்கு ஆட்கள் இல்லாமல் போக, முசுலிம் மக்களின் சார்பாக பீரிஸ் மாத்தையாவோடையும், மிலிந்த மொறகொட
வோடையும் விடுதலைப் புலிகள் தான் கதைச்சவையள் என்றால் பாருங்கோவன் பிள்ளையள்.

அந்த நேரத்தில் எங்கடை தம்பி அன்ரன் பாலசிங்கம் நக்கலாக ஒரு கதையயாண்டு சொல்லிச்சுதே பாருங்கோ. பேச்சுவார்த்தை முடிஞ்சதும் பத்திரிகையாளர் ஒருவர் தம்பி பாலசிங்கத்தை மறிச்சுக் கேட்டவர்,

‘இந்த முறை ஏன் பேச்சுவார்த்தைக் குழுவில் கக்கீம் கலந்து கொள்ளவில்லை?’

அதுக்கு தம்பி பாலசிங்கம் சொல்லிச்சுது: ‘அவரின்ரை கட்சிக்குள்ளை பெரிய பிரச்சினை. அவரின்ரை தலைவர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்று கதைக்கீனம். இந்த நேரத்திலை தன்ரை பதவியைத் தக்க வைக்கிறதா, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறதா என்ற நிலைமையில் ஆள் பேச்சுவார்த்தையும் வேண்டாம், தனி முஸ்லிம் பிரதிநிதித்துவமும் வேண்டாம் என்று கொழும்புக்கு ஓடிப் போய் விட்டார்.’

உதைக் கேட்டதும் பக்கத்திலை நின்ற பத்திரிகையாளர்மார் எல்லோரும் கொல்லென்று சிரிச்சவையள்.

அந்த அளவுக்கு அந்த நாட்களில் முசுலிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை சந்தி சிரிக்கிற அளவுக்கு இருந்திச்சுது.

ஒன்று மட்டும் சொல்லுவன் பிள்ளையள். ரிசாத் பதியுதீன் பதவி விலகிறதாக இருந்தால், தாங்களும் பதவி விலகுகிறோம் என்று உந்த முசுலிம் அமைச்சர்மார் சொன்னதில் பல சூட்சுமங்கள் பொதிந்திருக்குது.

உவையள் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினதெல்லாம் அப்பாவி முசுலிம் வாக்காளர்களை ஏமாற்றுகிறதுக்கும், தங்கடை நாடாளுமன்றக் கதிரைகளைத் தொடர்ந்தும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறதுக்கும் தான்.

இன்றைக்கு இலங்கையில் முசுலிம் மக்களுக்கு எதிராக சிங்கள,பெளத்த பேரினவாதம் வெறிகொண்டு தாண்டவம் ஆடுது. பள்ளிவாசல்களுக்கு கல் எறியிறாங்கள். திருக்குரானை எரிக்கிறாங்கள். முசுலிம் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீவைக்கிறாங்கள். ஆனால் உதையயல்லாம் தடுத்து நிறுத்த வக்கில்லாத ரணில் மாத்தையாவின்ரை அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டு தான் உந்த முசுலிம் அமைச்சர்மார் இருந்தவையள்.

இப்பவும் அதே முண்டு கொடுப்புத் தான். அமைச்சுப் பதவிகளில் இருந்து தான் ஆட்கள் விலகியிருக்கீனமே தவிர, ரணில் மாத்தையாவின்ரை அரசாங்கத்தைக் காப்பாத்துகிறதில் தான் அவை குறியாய் இருக்கீனம்.

உந்த முசுலிம் அமைச்சர்மார் எல்லோருக்குமே தெரியும், ரணில் மாத்தையாவின்ரை அரசாங்கம் கவிண்டுது என்றால் தங்கடை கதை அம்பேல் தான் என்று. நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் என்று வந்தால் வெறிகொண்டு நிற்கிற சிங்கள,பெளத்த பேரினவாதம் இந்த முறை மகிந்த மாத்தையாவைத் தான் பிரதமர் சிம்மாசனத்தில் அமர்த்தும்.

கெஞ்சிக் கேட்டாலும் மகிந்தரின் அரசாங்கத்தில் தாங்கள் இணைய முடியாது என்று உந்த முசுலிம் அரசியல்வாதிகள் எல்லோருக்குமே நல்லாகத் தெரியும்.

அதைவிட மீண்டும் மகிந்தர் ஆட்சிக்கு வந்தாலோ, அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற்றாலே தங்க
ளுக்கு சிங்கள,பெளத்த பேரினவாதம் பெரிய ஆப்பு இறுக்கும் என்பதும் உவையளுக்கு நல்லாகத் தெரியும்.

அதுதான் ரணில் மாத்தையாவின்ரை அரசாங்கத்தைத் தக்க வைக்கிறதுக்கு ஆட்கள் துடியாய் துடிச்சுக் கொண்டிருக்கீனம்.

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினாலும், தாங்கள் ஆளும் கட்சியின் பின்வரிசையில் இருந்து கொண்டு ரணிலின் அரசாங்கத்தை ஆதரிப்பம் என்று ஆட்கள் சூளுரைத்திருக்கீனம் என்றால் பாருங்கோவன் பிள்ளையள்.

உதுக்குள்ளை முசுலிம் அரசியல்வாதிகளைப் பார்த்துத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழப் பழக வேண்டும் என்று உந்தக் கொலைவெறி பிடிச்ச ஈ.பி.டி.பி கும்பலின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சொல்லியிருக்கிறாராம். உதைத் தான் ‘சாத்தான் வேதம் ஓதுது’ என்று எங்கடை ஊரிலை

வெள்ளைக்காரனின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்.
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்று சொல்கிறதிலை நியாயம் இருக்குது தான் பிள்ளையள். ஆனால் அதுக்காக அடம்பன் கொடியோடை புடலங்காய் கொடி சேர்கிறதாலை மிடுக்கு வந்திடுமே பிள்ளையள்?

ஒற்றுமை என்கிறது ஒத்த கொள்கை உடையவர்களுக்கு இடையில் வர வேண்டியது பாருங்கோ. தமிழனை அழிக்கிற கொள்கையோடை இருக்கிறவனோடையும், தமிழனிரை கச்சையையும் விற்று வயிறு வளர்க்கிற கொள்கையோடை இருக்கிறவனோடையும், தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்று கொள்கைப் பிடிப்போடை இருக்கிற தமிழ்த் தேசியவாதிகள் ஒன்று சேர்கிறதாலை எந்த நன்மையும் கிடைக்காது.

உதை விளங்கித் தான் பன்றியோடு சேரும் கன்றும் ஏதோ தின்னுமாம் என்று அந்தக் காலத்தில் எங்கடை கொப்பாட்டன்மார் சொன்னவையள்.

ஏதோ, விளங்கிற ஆட்களுக்கு விளங்கினால் சரி.
வேறை என்ன பிள்ளையள்?
அடுத்த முறை சந்திப்பம்.

-பிலாவடி மூலைப் பெருமான்-

நன்றி: ஈழமுரசு