ஆவணங்களற்ற வெளிநாட்டினர், விரட்டி பிடித்த காவல்துறை

வெள்ளி ஓகஸ்ட் 05, 2022

மலேசியாவின் கெலண்டன் பகுதியிலிருந்து கோலாலம்பூர் நோக்கி காரில் அழைத்துச் செல்லப்பட்ட 25 ஆவணங்களற்ற வெளிநாட்டினரும் அவர்களை அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 வழக்கமான ரோந்து நடவடிக்கையில் மலேசிய காவல்துறை ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் சென்ற டொயோட்டோ காரை விரட்டி பிடித்த போது அதில் ஆவணங்களற்ற வெளிநாட்டினர் இருந்திருக்கின்றனர். 

இந்த காரை ஓட்டிய 17 வயது இளைஞன் பிடிபடும் முன்னர் ஒரு இருசக்கர வாகனத்தையும் மூன்று கார்கள் மீதும் மோதி இருக்கிறார். 

“6 பெண்கள் உள்பட 25 மியான்மர் நாட்டவர்கள் இக்காரில் இருந்தனர்,” என Sentul மாவட்ட காவல் தலைமை அதிகாரி Beh Eng Lai தெரிவித்திருக்கிறார். 

ஆவணங்களற்ற வெளிநாட்டினரை காரில் அழைத்துச் சென்று வேலை வாங்கித் தருவதற்காக ஒவ்வொரு வெளிநாட்டினரிடமும் 6 ஆயிரம் மலேசிய ரிங்கட்டுகள் (இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய்) பெறப்பட்டது விசாரணையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.