அவர்களை இடமாற்றி தமிழர்களை நியமியுங்கள்

சனி சனவரி 18, 2020

அண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்தேன். அங்கு மின் இணைப்பு வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அதில் நின்ற சாரதி ஒருவரிடம் நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவர் களுத்துறை என்றார்.

இஃதென்ன, வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞருக்கு சாரதி நியமனத்தை வழங்காமல், களுத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்துள்ளது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடபகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கேட்கவில்லை.

இவ்வாறு கூறியவர் இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே.

அவர் கூறிய மேற்படிவிடயம் பற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை மின்சார சபை, நில அளவைத் திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம் என எங்கும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு நியமனம் வழங்கியதென்பது முற்றிலும் உண்மையான விடயம்.

எனினும் இதுதொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பைத் தெரிவிக்காமல் மெளனமாக இருந்துவிட்டது.

வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்குத் தலையாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கும் உடன்பட்டது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆக, தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்கு நியமனங்கள் வழங்குங்கள் என்று கேட்க முடியாத அளவில், நம் தமிழ் அரசியல் தலைமை இருந்தது எனும்போது அதற்குள் இருக்கக் கூடிய சூச்கசுமம் என்ன என்பது புரிதற்குரியது.

சரி, நடந்ததை பேசிப் பயன் இல்லை. மாறாக நடந்த சதி வேலையைச் சீராக்கம் செய்வது தான் தேவையான விடயம்.எனவே கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் தமிழர் தாயகத்தில் உள்ள அரச வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை, உட னடியாக தென்பகுதிக்கு இடமாற்றம் செய்வதுடன் அவர்களின் இடங்களுக்குத் தமிழ் இளைஞர் யுவதிகளை நியமிக்க வேண்டும்.

இதனைச் செய்யாதவிடத்து தமிழர் பிரதேசத்தில் உள்ள அரச திணைக்களங்கள், கூட்டுதாபனங்களில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டதன் காரணமாக ஆளணி வெற்றிடங்கள் முழுமைப்பட்டுள்ளது.

எனவே தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அரச அமைப்புகளில் வேலைவாய்ப்பை வழங்குவது முடியாத காரியமாகிவிடும்.

அதிலும் குறிப்பிட்ட அரச அமைப்புக்களில் உள்ள சாரதிகள் மற்றும் ஊழியர்கள் தென் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பதன் காரணமாக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் பெரும்பான்மை இனத்துக்குச் சார்பாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இதற்கு நல்ல உதாரணம் தொல்பொருள் திணைக்களம்.எனவே இது விடயத்தில் புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழ் இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை அவர்களுக்கே வழங்க வேண்டும்.
நன்றி-வலம்புரி