அவர்களைச் சாட்டி இவரும்;இவரைச் சாட்டி அவர்களும்

ஞாயிறு செப்டம்பர் 01, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதில் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது எனப் பகி ரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் மக்கள் அதீத கவனம் செலுத்துவர் என்பது உண்மை.

அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களின் விடயத்தில் கரு சனை கொண்டிருக்கவில்லை என்ற மனக் கிலேசம் இருக்கவே செய்கிறது.

அரசியல்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கவில்லை.
அதிலும் குறிப்பாக ஆனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் பிள்ளைகள் தங்கள் தாயை இழந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள் எனக் கெஞ்சினர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரி உங்கள் அப்பாவை விடுதலை செய்வேன் என உறுதிமொழி அளித்தார்.

எனினும் அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஆக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது அதிகாரக் குறைப்பால் எதனையும் செய்ய முடியவில்லை என்று கூறிவிட முடியாது.

மாறாக தனது அதிகாரத்துக்குட்பட்ட சில விடயங்களையேனும் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என ஜனாதிபதி மைத்திரி கூறுவதிலும் நிறைந்த உண்மை உண்டு.

அதாவது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இதுவரை தப்பிப் பிழைத்து நிற்கிறது என்றால், அதற்கு மூலகாரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அவ்வாறு தமக்குப் பக்கபலமாக நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக, தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாமல் கூட்டமைப்பை தனிப்பட்ட முறையில் கவனித்தல் என்ற மிக மோசமான செயற்பாடு கையாளப்பட்டது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது.

உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் ஊழல் அற்ற, நேர்மையான ஆட்சிக்குப் பெரும் பங்கமாகும். ஊழலை ஒழிக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகக் கடமை.

ஆனால் அந்தத் தார்மீகக் கடமையில் இருந்து தவறுகின்றதான நடவடிக்கைகள் இடம்பெற்றன எனும்போது, அது தமிழினத்துக்குச் செய்யப்பட்ட கடும் துரோகத்தனம் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

தவிர,தமிழர் தாயகத்தில் நடக்கின்ற அத்தனை பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல அரசாங்கம் நடந்து கொள்கிறது.

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்வதுபோல அரசாங்கம் பற்றி எந்த விமர்சிப்பும் இல்லாமல் மெளனம் காக்கிறது.

ஆக, ஒட்டுமொத்தத்தில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ் மக்களை ஏமாற்றி விட்ட னர் என்பதே உண்மை.

இந்த உண்மையை மறைப்புச் செய்ய ஜனாதிபதி அரசாங்கத்தையும் அரசாங்கம் ஜனாதிபதியையும் மாறிமாறிக் குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர் என்பதே நிஜம்.

நன்றி,வலம்புரி