அவுஸ்திரேலிய நகரங்களின் - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்_2019 !

வெள்ளி மே 17, 2019

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் ஞாயிற்றுக்கிழமையில் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.

இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில்  நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம்!! நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரகளையும்/ களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும். 

மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும். 

நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!!

இத்துடன் ஓஸ்ரேலியா மெல்பேர்ன், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய்து ”மெல்பேர்ன், சிட்னி இன் தமிழர் இனவழிப்பு நினைவுநாள்   நிகழ்வுகள்”  சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங்களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின்னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும். 

மற்றைய அவுஸ்திரேலிய நகரங்களின் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்  தெரிந்தவுடன் அறியத் தரப்படும்.

தயவுசெய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு,  மே மாதம் 18ம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் மாலை 6 மணிக்கு, Wantirna, Hungarian Community Centre மண்டபத்திலும், சிட்னியில் மாலை 6.30 மணிக்கு, Blacktown Bowman Hall மண்டபத்திலும், முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஆயிரக்கணக்கான உறவுகளின்  நினைவுகளை மீட்டி, தொடரும் இலட்சிய பயணத்தில் இணைந்து கொள்வோம்!! 2009யில் எம் தமிழ்மக்கள்மீது இடம்பெற்ற அப்பேரவலத்-தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம்!!!!!!!!!! உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றிகள்!!

குறிப்பு: ஓஸ்ரேலியாவில் அன்றைய தினம் தேர்தல் தினம் ஆகையால் நேரத்துடன் உங்கள் வாக்குகளை அளித்துவிட்டு அன்றைய நிகழ்வில் உரித்துடன் கலந்துகொள்ளுங்கள்.

 தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019 மெல்பேர்ண் நிகழ்வு

May 18 Tamil Genocide Remembrance Day – Melbourne

சுடர்விட்டுப் பிரகாசித்த எமது தாய்நிலம், புதிய நூற்றாண்டின் கொடிய இன அழிப்பின் சாட்சியாய், அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. விடுதலைக்காய்ப் போராடிய போராளிகளும், தேசத்தின் மக்களாய் எம்மண்ணோடு வாழ்ந்த எமது உறவுகளுமென, நிறைந்த எமது தாயகம் இனவாதப்படைகளின் கொடிய போராயுதங்களின், மனிதாபிமானமற்ற போரில் சிதறடிக்கப்பட்டது.

இலங்கைத்தீவில், தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே, காலங்காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள், முள்ளிவாய்க்காலில் அதன் உச்சக் கட்ட இனவழிப்பை நிகழ்த்தியது. எனினும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன், இக்கொடிய போரில் இழந்துபோன எம்முறவுகளை நினைவில் ஏந்தி, உலகப் பரப்பெங்கும் தமிழர் வாழும் தேசங்களில் மேமாதம் 18ம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்’ என்று நினைவு கூரப்படுகின்றது.

அவ்வகையில், 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப் பேரின வாத அரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப் போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் 10வது ஆண்டு நினைவு தினமும், காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண் நகரில் கங்கேரியன் மண்டபத்தில் உணர்வெழுசிசியுடன் எதிர்வரும் மே 18ம் நாள் சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. எம்மினம்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பை நினைவுகூரும் இந்நிகழ்வில்,தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு பங்கேற்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம் (Venue): Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152.

காலம் (Time): 18/05/2019 சனிக்கிழமை, மாலை 6.00P.M

மேலதிக தொடர்புகளுக்கு (Contact): 0433 002 619 or 0404 802 104

எமது உறவுகளை மனத்தில் நிறுத்தி இணைந்து கொள்வோம் – அவர் தம்மை

நினைவு கூர்வோம்.

 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - விக்ரோறியா, ஓஸ்ரேலியா.