ஆயிரம் ரூபாய் - காரணத்தை வெளியிட்டது இ.தொ.கா

சனி ஜூலை 04, 2020

சிறிலங்காவின்  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், அப்போதிருந்தே அழுத்தம் கொடுத்திருந்தால் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுத்திருக்க ​முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்களே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைக் குறைக்கூறி வருகிறார்கள் எனவும் கூறினார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் ஆயிரம் ரூபாய் தொடர்பில் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அப்போதிருந்த அரசாங்கம் தமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அப்போதிருந்த அழுத்தம் கொடுத்திருந்தால் தற்போது ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்துப் பேச்சுவார்த்தைகளை நாம் முன்னெடுத்துள்​ளோம். ஆனால் கம்பனிக்காரர்கள் இரண்டு கிலோ தேயிலையை மேலதிகமாக எடுக்க வேண்டுமெனக் கேட்கிறார்கள். ஏற்கனவே வெறும் 100 ரூபாயைப் பெற்றுக்கொடுப்பதற்காக 88 ஆயிரம் ரூபாய் இல்லாது போனது. அதுபோல நாம் ஒருபோதும் உங்களைக் காட்டிக்கொடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இதுபோன்றக் காரணங்களாலேயே தாம் ஆயிரம் ரூபாய் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தமிடவில்லை எனவும் கூறிய அவர், இன்றைக்கு மேலதிகமாக இரண்டு கிலோவைக் கேட்பவர்கள், ஆறு மாதங்கள் சென்றப் பின்னர் 5 கிலோ அதிகமாகக் கேட்பார்கள் என்றார்.