அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல்!

திங்கள் டிசம்பர் 02, 2019

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மூல மனுதாரரான சித்திக்கின் வாரிசுதாரரான மெளலானா செய்யது ஆசாத் ராஷ்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு மற்றும் மனுதாரர்கள் சிலரும் முடிவெடுத்துள்ளனர்.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன.

இந்தநிலையில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மூல மனுதாரரான சித்திக்கின் வாரிசுதாரரான மெளலானா செய்யது ஆசாத் ராஷ்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்தமனுவில் ‘‘இந்த வழக்கில் நீதிமன்றம் நம்பிக்கைகள் மற்றும் வழக்கு தொடுத்தவர்கள் இடையே சமநிலையை கடைபிடிக்க முயன்றுள்ளது. வழக்கில் இந்து தரப்புக்கு அந்த நிலத்தை ஒதுக்கிய நீதிமன்றம் முஸ்லிம் தரப்புக்கு மாற்று நிலம் ஒதுக்கியுள்ளது.

ஆனால் அந்த நிலத்தை முஸ்லிம் தரப்புக் கோரவில்லை. இந்த வழக்கில் சில தரப்பு ஆவணங்கள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.