ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சிக்கிய லாரி -ஜம்மு காஷ்மீர்

வியாழன் செப்டம்பர் 12, 2019

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சமீப காலமாக அதிக அளவில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டு அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லை பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி சிக்கியது. இத்தகவலை கத்துவா எஸ்எஸ்பி தெரிவித்தார்.

அந்த ஆயுதங்கள் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பயங்கர ஆயுதங்களுடன் லாரி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து விட்டதாக தெரிய வந்துள்ளது. ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு மட்டும் இதுவரை சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.