சைவ சமயத்துக்கு தலைமை அவசியம்!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

இலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படமாட்டாது.

மாறாக கத்தோலிக்க மதத்தைப் பொறுத்த வரை கத்தோலிக்க சிங்களவர்களும் இருப்பதன் காரணமாகவும் வல்லாதிக்க நாடுகள் கத்தோலிக்க மதம் சார்ந்தவை என்பதாலும் இலங்கையில் கத்தோலிக்க நிந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதற்கு மேலாக இஸ்லாமியத்தில் கைவைத்தால்,கழுத்து வெட்டும் நாடுகள் பெற்றோலை வெட்டி விடும் என்ற பயம்.

எனவே இஸ்லாமியத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக சைவ சமயம் இந்த நாட்டின் ஆதிச் சமயம்.

இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இலங்கையை சிவபூமி என்று திருமூலர் நாயனார் புகழ்ந்துரைத்துள்ளார்.

இப்படியயல்லாம் இருந்தும் சைவ சமயத்தை என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். கேட்பதற்கு ஆள் உள்ளூரிலும் இல்லை. வெளிநாடுகளிலும் இல்லை என்ப தன் காரணமாக சைவ சமயத்துக்கு ஒரு சதமும் மதிப்பில்லை என்றாயிற்று.

இந்த உண்மையை சைவ மதத் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நல்லை ஆதீனத்தில் சைவ சமயத் தலைவர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பு தொடர்பில் தகவல் தெரிவித்த சைவ சமயத் தலைவர்கள்; வெறும் வேலை, செப்படி வித்தை என்று கூறினார்கள்.

ஆக, இந்தச் சந்திப்பானது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையேயன்றி வேறில்லை என்பது புரிதற்குரியது.

தவிர,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டு மல்ல இலங்கையில் யார் பிரதமராக இருந்தாலும் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இதுவே நிலைமை.

இதில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது.

ஆனால் இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குக் கண்டனம் கூடத் தெரி விக்கவில்லை எனின் சைவ சமயத்துக்கு இருக்கக்கூடிய மதிப்பு என்ன என்பதை சைவ சமயத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அதேநேரம் சைவ சமயத்தை மதிக்க வைப்போம் என்ற உறுதிமொழியையும் நாம் எடுத்தாக வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் முதலில் சைவ சமயத்துக்கென ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும்.

அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்.

பெளத்த பீடங்களில் அரசியல்வாதிகள் எப்படி வளைந்து வந்தனம் செய்கிறார்களோ அதுபோல சைவத் தலைமைப்பீடங்களுக்கும் வருகின்ற அரசியல்வாதிகள் குந்தியிருந்து கும்பிடு போடுவர்கள். இது நிச்சயம் நடக்கும்.

நன்றி வலம்புரி