சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வேண்டிய காலம்... பிலாவடி மூலைப் பெருமான்

வியாழன் மே 16, 2019

வணக்கம் குஞ்சுகள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் எட்டியிருக்கிற நிலையில் இன்றைக்கு எல்லோருக்குமே இருக்கிற கேள்வி இந்தப் பத்து வருசத்தில் நாங்கள் எதைச் சாதிச்சிருக்கிறம் என்பது தான்.

உண்மை தான் பிள்ளையள்.

எல்லா நாடுகளிலும் ஆயுதப் போராட்டங்கள் வெற்றி பெறுகிறதில்லை தான். ஆனால் அதற்காக போராடும் இனங்கள் ஓய்ந்து போகிறது கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் தங்கடை உரிமைகளை வென்றெடுப்பதற்காக அந்த மக்கள் போராடிக் கொண்டு தான் இருப்பீனம்.

உதாரணத்திற்கு குர்திஸ்தான் மக்களை எடுத்துக் கொள்ளுவம் பிள்ளையள். இந்த வல்லரசு நாடுகளால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு இனம் இந்தக் குர்திஸ் இனம். இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் பிரிட்டனும், பிரான்சும், அமெரிக்காவும் மத்திய கிழக்கில் ஒற்றாமான் சாம்ராச்சியத்தை விழுத்துவதற்கு உறுதுணையாக நின்ற மக்கள் தான் உந்த குர்திஸ் மக்கள். உந்த மேற்குலக வல்லரசுகளுக்காக குருதி சிந்தித் தாங்கள் போராடினால், நிச்சயம் ஒற்றாமான் சாம்ராச்சியத்திடம் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று தான் அந்தக் காலகட்டத்தில் குர்திஸ் மக்கள் நம்பினவையள்.

ஆனால் கடைசியல் என்ன நடந்தது?

குர்திஸ்தான் மக்களுக்குத் தனிநாடு எடுத்து தருகிறம் என்று சொல்லி அவர்களைப் போராட வைச்ச உந்த மேற்குலக வல்லரசுகள், கடைசியில் குர்திஸ்தானை நாலு துண்டாகப் பிரிச்சு, ஒரு துண்டை ஈராக்கிட்டையும், இன்னொரு துண்டை ஈரானிட்டையும், மற்றொரு துண்டை சிரியாவிட்டையும், பெரியதொரு துண்டை துருக்கியிட்டையும் கொடுத்தவையள். அதுக்காக அந்த மக்கள் சளைச்சுப் போகேல்லை. அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடினவையள். எப்ப எல்லாம் தங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைச்சுதோ அப்ப எல்லாம் களத்தில் இறங்கிப் போராடினவை.

1991ஆம் ஆண்டு வளைகுடா யுத்தத்தில் சதாம் உசேனின் படையளை குவைத்தை விட்டு அமெரிக்காவும் நேச நாடுகளும் விரட்டியடித்த உடனே ஈராக்கில் இருந்த குர்திஸ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினவையள். அதுக்காக பல ஆயிரக்கணக்கான குர்திஸ் மக்களை சதாம் உசேனின்ரை இராணுவம் கொன்று குவிச்சது. ஆனாலும் அந்த மக்கள் தளரவில்லை. அந்த நேரத்தில் அந்த மக்களுக்கு அமெரிக்காவும், மற்ற நேச நாடுகளும் கொடுத்த வாக்குறுதி, ‘சதாமை ஆட்சியில் இருந்து விழுத்துறதுக்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்குத் தனிநாடு பெற்றுத் தாறம்’ என்பது தான். அப்படியே குர்திஸ் மக்களும் செய்தீனம். ஈராக்கின்ரை வடக்கில் குர்திஸ் மக்கள் வாழும் மாநிலம் ஒரு சுயாட்சிப் பிராந்தியமாக மாறிச்சுது. பிறகு உந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி திரும்பவும் 2003ஆம் ஆண்டு சதாம் உசேனுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கேக்குள்ளை கூட களத்தில் நின்று போராடினது குர்திஸ் மக்கள் தான். அதுக்குப் பிறகாவது தங்களுக்கு தனிநாடு கிடைக்கும் என்று குர்திஸ் மக்கள் நினைச்ச போது, திரும்பவும் குர்திஸ் மக்களை அமெரிக்காவும் மற்ற மேற்குலக வல்லரசுகளும் நட்டாற்றில் கைவிட்டவை.

அப்படியிருந்தும் சும்மா இருக்காமல் தங்கடை படை பலத்தையும், பொருளாதார பலத்தையும், அரசியல் பலத்தையும் தக்க வைச்சு தேசப் பற்றோடு தான் குர்திஸ் மக்கள் இருந்தவையள். அப்படி குர்திஸ் மக்கள் இருந்திருக்காவிட்டால், உந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற மதவெறி பிடிச்சு ஜிகாத் கொலைவெறிக் கும்பல் முழுக் குர்திஸ் மக்களையும் அழிச்சிருக்கும். தங்கடை இராணுவ பலத்தைப் பயன்படுத்தி குர்திஸ் மக்கள் போராடினவையள். ஈராக்கின்ரை பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற கொலைவெறிக் கும்பலிட்டை இருந்து மீடடெடுத்தவையள்.

சிரியாவிலையும் உது தான் நடந்தது. உந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற கொலைவெறிக் கும்பல் சிரியாவுக்குள் உள்ள குர்திஸ் பகுதிகளுக்குள்ளை நுழைஞ்ச போது, அதுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியது குர்திஸ் மக்கள் தான். அந்த நேரத்தில் சிரியாவில் உள்ள குர்திஸ் மக்களுக்கு சுயாட்சி பெற்றுத் தருகிறம் என்றும், ஈராக்கில் உள்ள குர்திஸ் மக்களுக்கு தனிநாடு பெற்றுத் தருகிறம் என்றும் வாக்குறுதிகளை அள்ளி வீசின அமெரிக்காவும் மற்ற நாடுகளும், ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற கும்பல் வாலைச் சுருட்டிக் கொண்டு சிரியாவை விட்டும், ஈராக்கை விட்டும் ஓடத் தொடங்கினதும் அப்படியே வாக்குறுதிகளை பறக்க விட்டவை.

1

அதுக்காக குர்திஸ் மக்கள் தளர்ந்து போகவில்லை பாருங்கோ. தான் பின்னின வலை ஒவ்வொரு தடவை சிதைக்கப்பட்டதும், திரும்ப திரும்பத் தளராமல் புதிய வலையைப் பின்னும் சிலந்தி போலத் தான் இன்றைக்கும் குர்திஸ் மக்கள் போராடிக் கொண்டு இருக்கீனம். இன்றைக்கு இல்லையயன்றாலும் என்றைக்கோ ஒரு நாள் தங்களுக்கு குர்திஸ்தான் என்றொரு தனிநாடு அமையும் என்று அந்த மக்கள் உறுதியாக நம்புகீனம்.

இது தான் பிள்ளையள் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் நான் சொல்ல வேண்டும் பிள்ளையள். தமிழீழத்தில் எங்கடை பிள்ளையள்... அது தான் எங்கடை புலிச்சேனை வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தேக்குள்ளை குர்திஸ் மக்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டது தமிழர்களைத் தான். தனிச்சு நின்று, எந்த நாட்டின்ரை உதவியும் இல்லாமல் தனிநாடு அமைக்கிறதுக்காகப் போராடுகிற எங்கடை இனத்தைப் பார்த்து அன்றைக்கு குர்திஸ் மக்கள் வியந்து போனவையள். எங்கடை பெண் போராளிகளை முன்னுதாரணமாகக் கொண்டு தான் குர்திஸ்தானில் பெண் போராளிகள் உருவாகினார்கள் என்றால் பாருங்கோவன் பிள்ளையள்.

முள்ளிவாய்க்காலிலை எங்கடை ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட அந்த நாட்களில், அதுவும் சரியாகக் குறிப்பிடுகிதென்றால் 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 26ஆம் திகதி, சேக்மஸ் அகமட் என்ற குர்திஸ் எழுத்தாளர் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை எல்லா சுதந்திரப் போராட்டங்களையும் அளவீடு செய்கிற தங்க முத்திரை என்று குறிப்பிட்டார் என்றால் பாருங்கோவன். அந்த நேரத்தில் நாங்கள் எல்லாம் தோல்வி மனப்பான்மையில் மூழ்கியிருக்கேக்குள்ளை அந்த மனுசன் எழுதினார், ‘யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதை நினைச்சுத் தமிழர்கள் வெட்கப்படத் தேவையில்லை: ஏனென்றால் அது புகழுக்கும், பெருமைக்குரிய தோல்வி. தாங்களும் 1925ஆம் ஆண்டு, 1938ஆம் ஆண்டு, 1946ஆம் ஆண்டு, 1975ஆம் ஆண்டு, 1988ஆம் ஆண்டு, 1991ஆம் ஆண்டு, 1999ஆம் ஆண்டு என்று ஏழு தடவைகள் தோல்வியைத் தழுவினாலும் தமிழர்கள் தழுவியது எதிரியிடம் மண்டியிடாத தோல்வி என்று அவர் எழுதினார் பிள்ளையள். அதோடை மனுசன் தன்ரை கட்டுரையை முடிக்கவில்லை பிள்ளையள். கடைசியில் மனுசன் எழுதினார்: தமிழீழ மக்களாகிய நீங்கள் புத்திக்கூர்மையும், ஆளுமையும், வள ஆற்றலும் கொண்டவர்கள். நீங்கள் மீண்டும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவீர்கள். உங்கள் கனவுகளையும், நம்பிக்கைகளையும் நீங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் பட்சத்தில் என்றோ ஒரு நாள் உங்கள் வாக்கு சக்தி ஊடாகவோ அல்லது துப்பாக்கி ரவைகள் மூலமாகவே தமிழீழத்தை உங்களால் சாத்தியப்படுத்த முடியும்.’’ பத்து வருசத்துக்கு முதல் குர்திஸ் மக்களுக்கு உதாரணமாக இருந்த நாங்கள் இன்றைக்கு குர்திஸ் மக்களை உதாரணமாகக் கொண்டு கதைக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறம் என்றால் நாங்கள் எந்த இடத்தில் நிற்கிறம் என்பதைப் புரிந்து கொள்ளலாம் பிள்ளையள்.  உதைத் தான் என்ரை ஆச்சி அந்த நாட்களில் அடிக்கடி என்னட்டை சொல்கிறவா, ‘முற்றத்து மல்லிகை மணக்காது’ என்று.

எது எப்படியோ, அண்டைக்கு சேக்மஸ் அகமட் என்கிற அந்த குர்திஸ் எழுத்தாளர் எழுதின அந்த வசனம் தான் இன்றைக்கும் என்ரை மனதில் பதிஞ்சு கிடக்குது. நாங்கள் திரும்பவும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வேண்டும் பிள்ளையள். அப்பத் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும். சரி, வரட்டே பிள்ளையள்?

நன்றி: ஈழமுரசு