சாதி, மத, அரசியல் வேறுபாடுகளின்றி தமிழர்களாய் இணைந்து தைத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

புதன் சனவரி 13, 2021

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் நாளை கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் பண்டிகைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதி, மத, அரசியல் வேறுபாடுகளின்றி தமிழர்களாய் இணைந்து தைத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

தமிழகத்திலும், ஈழத்திலும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

அதிமுக அரசின் ஆட்சிக்காலம் தொடங்கியதில் இருந்தே தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, மண்ணின் மக்களின் வேலை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர். 

8 வழிச்சாலை திட்டம், கெயில் குழாய் திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசக்கார திட்டங்களின் மூலமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டும் வரும் நிலையில், தற்போது புதிய வேளாண் சட்டங்கள் என்ற ஏவுகணையை மோடி அரசு ஏவியுள்ளது. மோடி அரசின் தமிழர்களின் விரோத போக்கிற்கு எடப்பாடி அரசும் துணை போகிறது. 

இந்நிலையில், பொங்கலாய், திருநாளாய், உழவர் பெருநாளாய் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் பொங்கல் திருநாளான இன்றிலிருந்தாவது எதிர்வரும் காலங்களில் தமிழக மக்களின் துயரங்கள் நீங்கி வாழ வேண்டும். 

இந்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலின் முடிவு தமிழக மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக வேண்டும். நாட்டில் சாதி, மத, மொழி வேறுபாடுகளை மறந்து, மனிதநேய நல்லிணக்கம் நிமிர்ந்து, ஒற்றுமை, சமாதானம் நிறைந்து விளங்கிட இணைந்து மகிழ்வோம். 

தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தமிழகத்திலும், ஈழத்திலும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.