சாதகமான சூழ்நிலைகளை குழப்பி விடாதீர்கள்!

செவ்வாய் மார்ச் 12, 2019

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்குக்கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பிடமிருந்து வலுவடைந்து வருகிறது.

இந்த விடயத்தில் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றாக நின்று காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றன.

இதில் கூட்டமைப்புக்குள் இடம்பெற்றிருக்கக்கூடிய புளொட், ரெலோ ஆகிய கட்சிகளும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளன.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போக்கு இலங்கை அரசுக்குச் சார்பாக இருப்பதை உணரமுடிகிறது.

காலஅவகாசம் என்ற விடயத்தில் மட்டுமன்றி வேறு பல சந்தர்ப்பங்களிலும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதை தனது இலக்காகக் கொண்டு தமிழரசுக் கட்சி செயற்படுகின்றதேயன்றி, தமிழ் மக்களின் நலன் பற்றி அந்தக் கட்சி கவனம் எடுப்பதாகத் தெரியவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினூடாக அடையப்படும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியிருந்த தமிழரசுக்கட்சி;அந்த நம்பிக்கையினூடாக தனது அரச ஆதரவை நியாயப்படுத்தியிருந்தது.

கடும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் துன்பத்தின் எல்லைக்குச் சென்றுள்ளனர். தம் வாழ்வை வெறுத்திருக்கக்கூடிய அவர்களின் நினைப்பு ஏதோ அரசுடன் இணைந்து கொண்டேனும் எங்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொண்டால் பரவாயில்லை என்பதுதான்.

ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குவது தமிழரசுக் கட்சியின் நோக்கமேயன்றி தீர்வு அல்ல என்பதையும் இலங்கை அரசு நம்பவைத்து ஏமாற்றுகிறது என்பதையும் நம் மக்கள் உணரத்தவறினர்.

இந்த நிலையில்தான் இலங்கை அரசுக்கான தனது ஆதரவை தமிழரசுக் கட்சி வழங்குவதற்காக ஏதோ காரணங்களை முன்வைக்கின்றது.

எனினும் இந்தக் காரணங்கள் இனியும் ஏற்புடையவை அல்ல என்பதும் தமிழரசுக் கட்சி முன்வைக்கின்ற காரணத்தை அந்தக் கட்சியுடன் சேர்ந்து கூட்டமைப்பாக இயங்குகின்ற கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக, தமிழரசுக் கட்சி நியாயமற்ற பாதையில் பயணிக்கிறதா? என்ற கோணத்தில் பார்க்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.

எதுஎவ்வாறாயினும் தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருக்கின்ற சர்வதேச சூழலைக் கெடுத்துவிடாதீர்கள் என்பதுதான் நாம் தமிழரசுக் கட்சியிடம் விடுக்கின்ற மன்றாட்டமான கோரிக்கை.

-வலம்புரி-