சாவர்க்கர் போலவே ஓடி ஒளிந்து மன்னிப்பு கேட்பார்கள்!

சனி ஓகஸ்ட் 06, 2022

கோவை- பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கோழைத் தனமாக, அவர்கள் தலைவர் சாவர்க்கர் போலவே ஓடி ஒளிந்து மன்னிப்பு கேட்கக் கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரச்சார பயணம்

இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாத காலமாக ‘இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம்’ என்ற தலைப்புகளில் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சார பயணம் நடத்தி வருகிறது. இதன் நிறைவு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னை மதுரவாயிலில் நடைபெற்றது.

பெரியார் சிலை

இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ் திரைப்படசண்டை பயிற்சியாளரும், நடிகருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்க கோயில் எதிரே உள்ள பெரியார் சிலை, எப்போது உடைக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக என்று பேசினார்.

கைது செய்

இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது பேச்சைக்கு கண்டனம் தெரிவித்து, கனல் கண்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

புகார் மனு

பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணன் மீது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கனல் கண்ணனின் பேச்சு இரு வேறு சமூகத்தினர் மத்தியில் கலவரத்தை தூண்டு விதமாக இருப்பதால், இவர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இரண்டு பிரிவுகளில்

இந்த புகாரை ஏற்றுக் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணனை, கைது செய்ய, அவர் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அங்கு அவர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

தலை மறைவு

இந்த புகாரால் எங்கே காவல்துறையினர் தன்னை கைது செய்ய விடுமோ என்ற அஞ்சி, கனல் கண்ணன் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

பாஜக எதிர்ப்பு

கனல் கண்ணன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை, மற்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருவருமே பக்தர்கள்

இந்த நிலையில் பெரியார் சிலை உடைப்பேன் என்ற சர்ச்சை தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “1973-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் நகராட்சி தலைவராக இருந்த கொங்கிரஸ் கட்சியின் வெங்கடேஷ் தீட்சிதர், ‘பெரியாருக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்டு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். அந்த வார்டு கவுன்சிலராக இருந்தவர் ராஜகோபால். இருவருமே தீவிர பக்தர்கள், ஐங்கார். அவர்கள்தான் பெரியாருக்கு சிலை வைக்க இடமும் கொடுத்திருக்கிறார்கள். 

சிமெண்ட் சிலை

அப்படி இருந்தும் சிலை உடனடியாக வைக்க முடியாமல், 1996-ஆம் ஆண்டு தான் சிமென்ட் சிலை வைக்க முடிகிறது. அதையும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் உடைத்து விடுகிறார்கள். அதன் பின் மீண்டும் இன்றைக்கு இருக்கிற வெண்கலச் சிலை 2006-ஆம் ஆண்டு வைக்கப்படுகிறது.

சாதாரண மக்கள்

எனவே பாஜக, இந்து முன்னணி போன்றோர் கலவரத்திற்கும், தங்கள் அரசியல் பயன்பாட்டிற்கும் இது போல் பேசுவது வழக்கம். ஆனால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் சாதாரண மக்களோ, கோயிலுக்கு செல்லும் மக்களோ அதை பற்றிக் கவலைப்படவில்லை.

ஓடி ஒளிந்து

அப்படிப்பட்ட சூழலில் இவர்கள் மட்டும் தான் தொடர்ச்சியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது கனல் கண்ணன் எனும் நபர் ஒரு பரபரப்பு அரசியலுக்காகப் பேசி இருக்கிறார். பேசியவரும் ‘ஆம் நான் பேசினேன்’ என்று தைரியமாக நிற்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

19 முறை சிறை

அவர் யாரை பற்றி பேசினாரோ, அங்கு சிலையாக இருக்கும் பெரியாரோ 19 முறை சிறை சென்றிருக்கிறார். ஒரு முறை கூட ஜாமீன் கேட்டதில்லை. குற்றம் செய்யவில்லை என்றும் சொல்லியது கிடையாது. செய்த செயல், பேசிய பேச்சு நியாயமானது.

விரும்பி கேட்டு

மக்களுக்கானது என்று சொன்னதை ஒட்டியே சிறைக்கு சென்றிருக்கிறாரே தவிர ஓடி ஒளிந்தது இல்லை. அதேபோல், ‘குறைந்த தண்டனை கொடுங்கள் என்று கெஞ்சமாட்டேன். உங்களுக்கு என்னைத் தண்டித்தால் எவ்வளவு திருப்தியாக, சந்தோஷமாக இருக்குமோ அந்த தண்டனைக் கொடுங்கள்’ என்று விரும்பி கேட்டு வாங்கி சென்றவர் பெரியார். 

சாவர்க்கர் போல்

அப்படிப்பட்டவர் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கோழைத் தனமாக, அவர்கள் தலைவர் சாவர்க்கர் போலவே ஓடி ஒளிந்து மன்னிப்பு கேட்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்” என்றார்.