சசிகலாவை சிறை மருத்துவமனையில் சந்தித்தார் டிடிவி தினகரன்!

வியாழன் சனவரி 21, 2021

மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் தொண்டர்கள் யாரும் பெங்களூர் வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து மூச்சுத்திணறல் காரணமாக சிவாஜி நகரில் உள்ள "பவுரிங் அரசு மருத்துவமனைக்கு" சசிகலா அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அங்கு இன்று "சிடி ஸ்கேன் கருவி" வேலை செய்யாததன் காரணமாக, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக பெங்களூர் விரைந்து வந்த டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களது குடும்பத்தில் ஒரு சில மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனை உள்ளே சென்று எனது சித்தியை பார்த்து நலம் விசாரிக்க காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால் நான் நெருங்கிய உறவினர் என்பதால் அனுமதி கேட்டு இருந்தேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவருக்கு, நல்லபடியாக சிகிச்சை வழங்கினால் மட்டும் போதுமானது. 

தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக வெளியே வரும்போது அவரை சந்தித்து பேசினேன். அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். உடலில் பிராணவாயு அளவு சீராக இருக்கிறது. எனவே தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் "சிடி ஸ்கேன்" எடுத்து பார்ப்பதற்காக விக்டோரியா மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இறைவனுடைய அருளால் "சிடி ஸ்கேன்" அறிக்கையில் எதுவும் இல்லை என்று வந்தால், ஒரு சில நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பிறகு அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார்.

நமது தொண்டர்கள் சசிகலா சென்னை திரும்பும்போது வழிநெடுகிலும் வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரியும். தற்போது ஆர்வத்தின் காரணமாக பெங்களூர் வருவதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அப்படி வர வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.

நீங்கள் தமிழகம் வரும்போது வரவேற்பு கொடுங்கள். சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து நின்றபடி வரவேற்பு கொடுத்தால் போதுமானது. இந்த காலகட்டத்தில் பெங்களூர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.