சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது! விக்டோரியா மருத்துவமனை தகவல் -

வெள்ளி சனவரி 22, 2021

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27ம் திகதி பெங்களூரு சிறையில் விடுதலையாக உள்ளார். இந்நிலையில் அவருக்க திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதித்ததில் அவருக்கு கொரோனாதொற்று பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இருந்தாலும் 'ஊடுகதிர் பரிசோதனை' செய்ய வேண்டும் என கூறி, விக்டோரியா மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். அங்கு நேற்று மாலை அவருக்கு ஊடுகதிர் பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில்,

பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு பவுரிங் மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில் சசிகலா இன்று (அதாவது நேற்று) மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையில், சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அ.ம.மு.க.வினர் சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் ஆலோசனை செய்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவாதித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியளார்களிடம் பேசிய, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். வழக்கமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தது 10 நாட்கள் சிகிச்சை அளிப்பது வழக்கமான நடைமுறை.

ஆனால், சசிகலா கொரோனாவோடு கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.