சசிகலாவிற்கு சிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது!

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் இதுபற்றி விசாரணை நடந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்தது. விசாரணை கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
 

பெங்களூர் ஜெயிலில் பெண்களுக்குரிய பகுதியில் இளவரசி தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.

 

 


இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிய உள்ளது. வருகிற 15-ந்தேதியுடன் அவர்களது சிறை வாழ்க்கை 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதற்கிடையே அவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தாவிட்டால் அவர்களது சொத்துக்களை முடக்கலாம் என்று கோர்ட்டு கூறியிருந்தது. ஆனால் அவர்களது அபராதத் தொகைக்காக இதுவரை சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் எதுவும் முடக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் கையகப்படுத்தப்பட்ட சசிகலாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அது முழுமை பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்தும் வி‌ஷயத்திலும் வருமான வரித்துறை மவுனமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை ஜெயிலில் கழித்து விட்டால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.

இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளது. சசிகலா 2017-ம் ஆண்டு சிறைக்கு சென்றார். 4 ஆண்டு தண்டனைப்படி அவர் 2021-ம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும்.

ஆனால் நன்னடத்தை அடிப்படையில் அவரை 1 ஆண்டுக்கு முன்பு விடுவிக்கலாம். எனவே அடுத்த ஆண்டு சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளது.