சென்னை மாநகராட்சி பாடசாலையில் புதிதாக 17,000 மாணவர்கள்!

செவ்வாய் ஜூன் 28, 2022

சென்னை-அரசு பாடசாலையில் புதியதாக 17 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் துணை ஆணையர் சினேகா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால், அனைத்து பாடசாலைகளும் இணையம் வழியாகவே நடத்தப்பட்டது. இதனால் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத சூழல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டது, மேலும் இந்த ஆண்டு தங்கள் பிள்ளைகளை தனியார் பாடசாலைகளில் சேர்ப்பதை விட, அரசு பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் முன்னுரிமை அளித்தனர். 

அதன் காரணமாகவே இந்த முறை, பாடசாலைகள் சேர்க்கை நடைபெற்ற நிலையில், சென்னை மாநகராட்சிப் பாடசாலைகளில் புதிதாக 17,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 281 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பாடசாலைகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு வகையான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கு 17 ஆயிரம் புதிய மாணவர் சேர்க்கை தற்போது வரை நடைபெற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் துணை ஆணையர் சினேகா தகவல் தெரிவித்துள்ளார்.