சென்னை மெரினா கடற்கரையில் ஒதுங்கும் நச்சுக்கழிவு நுரை!

ஞாயிறு டிசம்பர் 01, 2019

ஆலைகளில் இருந்து கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும் ரசாயன கலவைகளால் சென்னை மெரினா கடற்கரையில் நச்சுக்கழிவு நுரை கரை ஒதுங்க தொடங்கியுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ரசாயன கலவைகளுடன் கூடிய கழிவுநீரை உரிய முறையில் பூமிக்கு அடியில் சேமித்து சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக பொதுவெளிகளில் வெளியேற்றி வருகின்றன. இப்படி வெளியேற்றப்படும் நீர் மழை வேளைகளில் மெல்ல  கடலில் சென்று சேர்ந்து விடுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டினப்பாக்கம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில்  நச்சுக்கழிவு நுரை குவியலாக கரை ஒதுங்கியுது. நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரை  நச்சுக்கழிவு நுரை கரை ஒதுங்க தொடங்கியுள்ளது.  ஆனால், அப்பகுதியில் உள்ள குப்பங்களில் வாழும் மீனவர்கள் இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

கடல் நீரில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் வேளைகளில் இதைப்போன்ற நுரை திட்டுகள் கரை ஒதுங்குவது வழக்கமானதுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.