சென்னை மக்கள் இதுவரை அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவிக்கின்றனர் : ராமதாஸ்

செவ்வாய் நவம்பர் 17, 2015

சென்னை மாநகர மக்கள் கடந்த காலங்களில் அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

இது தொடர்பாக அவர் இன்று(நவம்பர் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதால் சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால், மழை, வெள்ளத்தின் பாதிப்புகள் சற்றும் குறையவில்லை.

சென்னை மாநகர மக்கள் கடந்த காலங்களில் அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை இன்னும் வெள்ளக்காடாகத்தான் காட்சியளிக்கிறது.  

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, வேனில் இருந்தபடியே,‘‘ வாக்காளப் பெருங்குடி மக்களே என்பதில் தொடங்கி எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!’’ என்பது வரை பேசி தேர்தல் பிரச்சாரம் செய்து திரும்பியிருக்கிறார்.

இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர் என 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குச் சென்ற ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக மூன்று பேரிடம் கூட வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறியவில்லை. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க திரண்டு வந்த போதிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவை  நெருங்க விடாமல் அவர்களை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் விரட்டியடித்தனர்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. எனவே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.