சென்னை! முப்படை வீரர்களின் குடியரசு தின விழா ஒத்திகை-

வியாழன் சனவரி 21, 2021

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா காமராஜர் சாலையில், முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

குடியரசு தினவிழா வரும் 26-ம்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்திசிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இதை முன்னிட்டு ஜன.20, 22, 24 ஆகிய தேதிகளில் மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடந்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முப்படையினர் அணிவகுப்பு நடத்தினர். தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப்., காவல்துறை, தீயணைப்பு படை உள்ளிட்டோர் அணிவகுப்புநடத்தினர். தொடர்ந்து காவலர்களின் இருசக்கர வாகன அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.