சென்னையில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!

வியாழன் பெப்ரவரி 13, 2020

மழைக்காலம் முடிந்த பின்னர் கொசுக்களின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்து வருவதால் சென்னையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது..

சென்னையில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுகிறது. மழைக்காலம் முடிந்த பின்னர் கொசுக்களின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் வேளையிலும் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுகின்றன. சாக்கடை கால்வாய் உள்ள பகுதியில்தான் கொசுக்கள் தாக்கம் அதிகமாக உள்ளன. கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் சிறுவர்கள், முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் குணமாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிசோதனையில் ஒரு சிலருக்கு மலேரியா, டெங்கு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

வியாசர்பாடி, பெரம்பூர், முகப்பேர் ஏரித்திட்டம், கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பல இடங்களில் கொசுக்களின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றாமல் நீண்ட நாட்களாக கிடப்பதால் அதில் இருந்து கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

முகப்பேர் ஏரித்திட்டம் முதலாவது குறுக்கு தெரு, 2-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள சிலர் அங்குள்ள காலி இடத்தில் குப்பைகளை கொட்டுவதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.

வீடு வீடாக குப்பை சேகரித்த போதிலும் கூட அங்குள்ள காலி மனையில் குப்பை கொட்டப்படுவதால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றை ஏற்படுத்துகின்றன.

கொசு ஒழிப்பை மாநகராட்சி தீவிரப்படுத்திய போதிலும் கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவரில் பெரும்பாலானவர்களுக்கு மலேரியா, வைரஸ், டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.

மாநகராட்சி சுகாதாரத்துறை கால்வாய் உள்ள பகுதிகளிலும், குப்பைகள் தேங்கி கிடக்கும் காலி இடங்களிலும் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.