செவரோன் பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழச்சோலையின் 25 ஆவது வெள்ளிவிழா!

சனி ஏப்ரல் 27, 2019

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான செவரோன் நகரின் பிறாங்கோ தமிழ்ச்சங்கம் தனது தமிழ்ச்சோலையினது 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாவை 20.04.2019 சனிக்கிழமை பி. பகல் 14.00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நடாத்தியிருந்தது.

ஆரம்ப நிகழ்வாக மாவீரர்களுக்கும், தாயவள் அன்னைபூபதியம்மா அவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவாகவும் மாவீரர் குடும்பம் ஈகைச்சுடரை ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 தொடர்ந்து மங்கல விளக்கினை வெள்ளிவிழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த சீனத் தமிழன் என்று அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த வில்லியம் சியா William ziia அவர்களும் சங்கத் தலைவர் திரு. செ. செல்வரதன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் து.மேத்தா  தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு பாலகுமாரன், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் சார்பாக செயலாளர் திரு. காணிக்கைநாதன், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி. நி. முகுந்தினி, மிருதங்க ஆசிரியர் திரு. நிதர்சன் முந்நாள் சங்கத் தலைவர் திரு.தவகுலசீலன், கூட்டமைப்பு பொருளாளர் திரு. விசுவநாதன், மற்றும் தமிழ்ச்சோலை நிர்வாகி கலைப்பொறுப்பாளர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து தமிழ்ச்சோலைக்கீதம் மாணவர்கள் ஆசிரியர்களால் பாடப்பட்டது. வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், சிறுவர் அபிநயப்பாட்டு, சிறுவர் உரை,எழுச்சி நடனம், குறவர் நடனம், கண்ணன் பாடல், வர்ணம் ஆங்கிலப்பாடல், நாடகங்கள் கோலாட்டம், கவியரங்கம், பட்டிமன்றம், உழவர் நடனம், தாயகப்பாடல் நடனங்களும் நடைபெற்றன.

நிகழ்வில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலான நடனக்கலைஞர்கள் நேரடியாக அணி இசைக்கலைஞர்களுடன் நட்டுவாங்கம் செய்யப்பட்டு நடனத்தை வழங்கி மக்களின் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றிருந்தனர். மிருதங்கத்தை திரு. நிதர்சன், வாய்ப்பாட்டினை திருமதி. சைலஐா அவர்களும்  வயலினை திருமதி. தர்மிக்கா அவர்களும் நட்டுவாங்கத்தை நடன ஆசிரியை திருமதி. மகேந்திரராஐா தனுசா அவர்கள் வழங்கியிருந்தார்.

25 ஆவது ஆண்டினை முன்னிட்டு ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரினை சங்கத் தலைவர் வெளியிட்டு வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள்> ஏனைய தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு விழாவுக்கு ஆதரவு கொடுத்த வர்த்தகர்கள் பெற்றுக்கொண்டனர்.

தமிழ்ச்சோலையில் 25 ஆண்டுகளாக இருந்து வரும் நடன ஆசிரியர்> மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள். தமிழில் 12 ஆம் ஆண்டு முடித்த மாணவர்கள்> நடன ஆசிரியர்களாக பட்டம் பெற்றவர்கள் ஆசிரியரானவர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளித்தலை கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பொறுப்பாளர் திருமதி. ந. அரியரட்ணம் மற்றும் சங்கத்தலைவர்  ஏனைய கட்டமைப்பின் பிரதிநிதிகள்  சங்க உறுப்பினர் செய்திருந்தனர்.

நிகழ்வின் இடையில் கலந்து கொண்டு சிறப்பித்த செவரோன் முதல்வர் Stéphane Blanchet ஸ்hP;பன் புளோன்சே அவர்கள் பொன்னாடை போத்தி மதிப்பளிக்கப்பட்டார். அவர் ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் பற்றியும்  குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் பற்றியும் அவர்களின் கலை  பண்பாடு  அரசியல் பிரச்சனைகள் பற்றி நிறையவே அறிவேன் என்றும்  இவர்களின் பல்வேறு செயற்பாடுகளுக்கு தான் உறுதுணையாக இருந்து வருவது போல தொடர்ந்தும் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

 நிகழ்வின் சிறப்பு விருந்தினர் சீனத்தமிழர் வில்லியம் அவர்கள் தமிழில் உரையாற்றினார். தமிழ்மீது அளவுகடந்த பற்றும்  கலையில் மிகுந்த விருப்பமும்தான் தன்னை இந்தளவு தூரம் தமிழைப்பேச வைத்தது என்றும், இன்று பல தமிழ்ப்பிள்ளைகள் தமது சொந்த மொழியான தமிழைப்பேசுவதை இழிவாகவும் தேவையில்லாதது என்றும் தாம் வாழ்விட மொழியை பேசுவதுதான் சிறப்பு என்று எண்ணுகின்றார்கள். ஆனால் சொந்த மொழிதான் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம் என்றும் கூறியிருந்தார். பரப்புரைப் பொறுப்பாளர் உரையில் இந்த 25 ஆண்டுகளில் செவரோன் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் 25 ஆண்டுகளுக்கு முன் இந்த தமிழ்ச்சோலையில் கல்விகற்ற குழந்தைகள் இன்று 31 வயதினை எட்டிய பெரியவர்களாக இருப்பார்கள் என்றும் இனிவரும் காலங்களில் அவர்களின் அளப்பரிய பணி செவரோன் தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டும் அதுவே அவர்கள் தம்மைப் பெற்றவர்களுக்கு செய்யும் நன்றிகடன் போல தமிழ் கற்றுத்தந்த தமிழ்ச்சோலைக்கும் செய்யும் நன்றியாகவும் இருக்கும் என்றும், கடந்த 71 ஆண்டுகளாக சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறையில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக 2010ம் ஆண்டு இந்த நகரத்தில் நிறுவப்பட்ட தமிழினப்படுகொலை ஞாபகார்த்த நினைவுக்கல் பற்றியும் வருடா வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து மே18 ம் நாள் நினைவுச்சுடர் ஏற்றிவைப்பதையும் இந்த ஆண்டு 10 ஆவது ஆண்டையும் அன்றைய நாளில் செவரோன் முழு மக்களும் அணிதிரள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 செவரோன் தமிழ்சங்கத்தால் தாயகத்தில் வாழ்வாதார உதவியை எதிர்பார்த்து நிற்கும் குடும்பங்களுக்கு உதவி வருவதையும்> குழந்தைகளின் கல்விக்காக அரும்புகள் என்ற அமைப்பின் ஊடாக உதவிவருவதையும் அன்றைய நிகழ்விலும்  ஏனைய உதவியாலும் கிடைத்த பொருளாதார உதவியை அரும்புகள் அமைப்பின் பிரான்சுப் பொறுப்பாளர் கையில் மக்களின் கரவொலியுடன் செவரோன் தமிழச்சங்கத் தலைவர் ஒப்படைத்திருந்தார். தொடர்ந்தும் ஒவ்வொரு மாதமும் அந்த உதவியை செய்வதாகவும் அதில் பங்களிக்க விரும்பும் பெற்றோர்கள், பெரிய பிள்ளைகளை இணையுமாறும் கேட்டுக்கொண்டார். 

தமிழ்ச்சோலையில் 12 ஆம் ஆண்டை நிறைவு செய்து பகுதிநேரமாக தொழில் செய்து வரும் பிள்ளைகள் ஐந்து பேர் தமது பிறந்த நாட்களில் அதன் நினைவாக தாயகத்தில் உள்ள தமது வயதையொத்த பெரிய ஐந்து பிள்ளைகளின் கல்விக்கான பொருளாதார உதவியை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்வாய்ப்புச்சீட்டும் நடைபெற்றது. இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடனும் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு 21.00 மணியளவில் நிறைவு பெற்றது. 

நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் காத்திரமான பயனுள்ள  மகிழ்ச்சியான நல்நிகழ்வுகளாக இருந்த போதும் நிகழ்வின் ஒழுங்கமைப்பும்  ஏற்பட்ட நேர இடைவெளிகளும்  மண்டபத்தில் மக்கள் 25 ஆவது ஆண்டுவிழாவில் நிற்கின்றோம் என்ற எண்ணம் மாறி களியாட்ட நிகழ்வில் நிற்பது போன்று வேறுவிடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் மண்டபம் சத்தமாக அமைதியற்றுக் காணப்பட்டமை பல முகங்களை கோணவைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

25 ஆவது ஆண்டு என்பது காலங்கள் பலகடந்து வந்த ஓர் கனதியான செயற்பாடு என்பதும் அதனை அடுத்த தலைமுறைக்கு காத்திரமிக்கதாக கொண்டு சென்று கொடுக்க வேண்டும்> சொல்லப்பட வேண்டும் என்பதில் இன்னும் அதிக கருசணை அனைத்துத் தரப்பினாலும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதோடு அதன் விளைவு அன்றைய 25 ஆவது ஆண்டுவிழாவில் குழந்தைகளின் அருமையான நான்கு நடன நிகழ்வுகள்  நடன நிகழ்வில் இல்லாத குழந்தைகளின் ஏனைய பெற்றோர்களும்  மக்களும் சென்றுவிட்ட நிலையில் நடைபெற்றது மிகுந்த வருந்தத் தக்கது. இனிவரும் காலங்களில் இரண்டு தசாப்தங்களை கடந்து நிற்கும் தமிழ்ச்சங்கங்கள் அதற்கு பொறுப்பாக இருப்பவர்கள் இந்த விடயங்களில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்பதே அன்றைய நாளில் பலரின் கருத்தாகவும் நாம் அதை உணரக்கூடியதாகவும் இருந்தது.