செவ்வாய் கிரகம்! உலங்கு வானூர்தி பறக்கவிடும் திட்டம் தள்ளிவைப்பு- நாசா

சனி ஏப்ரல் 03, 2021

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது.

1.8 கிலோ எடை கூடிய உலங்கு வானூர்தி;

கடந்த மாதம் தரையிறங்கிய அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் விண்கலம் சேகரித்து வருகிறது. 

அந்த விண்கலத்துடன் சிறிய அளவிலான உலங்கு வானூர்தி ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இன்ஜெனியூனிட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த உலங்கு வானூர்தி 1.8 கிலோ எடையுடன் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பறக்கும் உலங்கு வானூர்தி;

உலகத்தைக் கடந்து வேறொரு கோளில் முதன்முறையாக உலங்கு வானூர்தி பறக்க உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படும் இந்த முயற்சியை ஏப்ரல் 8-ம் திகதி மேற்கொள்ள நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், அதனை ஏப்ரல் 11-ம் திகதிக்கு மாற்றியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள நாசா மையத்துக்கு சொந்தமான ஜெட் புரொப்பல்சன் ஆய்வகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல் 12-ம் திகதிக்குள் உலங்கு வானூர்தி செவ்வாய் கிரகத்தில் பறக்கும் என்றும், அதன் தரவுகள் உடனடியாக பூமிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த ஆய்வகம் கூறியுள்ளது.

பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து பிரியும் இன்ஜெனியூனிட்டி உலங்கு வானூர்தி, பூமியின் காலமுறைப்படி 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து பேசிய நாசா விஞ்ஞானி லோரி கிளேஷ், 1997 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சோஜொர்னர் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள முடியும் என்ற சாத்தியக் கூறுகளை கொடுத்ததாக தெரிவித்தார்.

பூமியை விட பல மடங்கு கடினமான செயல்;

அந்த ரோவரின் செயல்பாடு செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை எப்படியெல்லாம் மேற்கொள்ளலாம் என்ற புதிய பரிமாணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ள லோரி கிளேஷ், அதனை அடிப்படையாகக் கொண்டு பெர்சவரன்ஸ் ரோவரில் உலங்கு வானூர்தி பொருத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இன்ஜெனியூனிட்டி உலங்கு வானூர்தி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் பறக்கும்பட்சத்தில், கிரகங்களை ஆய்வு செய்வதில் புதிய மைல்கல்லை எட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் செவ்வாய் கிரகத்தில் உலங்கு வானூர்தி பறக்க வைப்பது என்பது பூமியை விட பல மடங்கு கடினமான செயல். புவியீர்ப்பு விசை இருந்தாலும் பூமியுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு புவியீர்ப்பு விசை மட்டுமே உள்ளது. வளிமண்டல மேற்பரப்பு பூமியுடன் ஒப்பிடும்போது 1 விழுக்காடு அடர்த்தியாக இருப்பதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், சூரிய ஒளியும் பாதியளவு மட்டுமே கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். 

அதேபோல் தட்ப வெட்பநிலைகள் கணிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இரவில் அதன் செயல்பாடு மிகவும் சவாலாக இருக்கும்;

உதாரணமாக, இரவு நேரத்தில் மைனஸ் 90 டிகிரி வரை வெப்ப நிலை குறையும் என கூறும் விஞ்ஞானிகள், அந்த நிலையில் மின்னணு பொருட்கள் உடையவும், உறையவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் சமாளிக்க வேண்டும் என்றால், இன்டர்னல் ஹீட்டர்ஸ் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இதற்கான செயல்முறைகள் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகம், செவ்வாய் கிரகத்தில் ரோவரின் பாதுகாப்பு இல்லாமல் உலங்கு வானூர்தி நிலைநிறுத்துவது மிகவும் சவாலான விஷயம் என கூறியுள்ளது.

மேலும், ரோவரில் இருந்து உலங்கு வானூர்தி பிரிக்கப்பட்ட பின்னர் முதல் இரவில், அதன் செயல்பாடு மிகவும் சவாலாக இருக்கும் எனவும், இந்த முயற்சி சாத்தியப்பட்டால், விண்வெளி ஆராய்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் இருக்கும் என அந்த ஆய்வகம் கூறியுள்ளது.