செய்திகளும் எழும் கேள்விகளும்...?

ஞாயிறு சனவரி 12, 2020

செய்தி:- தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் நாட்டில் இரண்டு இனங்கள் இருப்பது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுவிடும் என்று சிறீலங்கா அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- அப்படி என்றால் வங்காள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படும் இந்தியாவில் வங்காளிகள் மட்டும் தான் வசிக்கின்றார்களா?

                                                                               *****************
செய்தி:- தமிழ் மொழியில் சிறீலங்காவின் தேசிய கீதம் பாடப்படுவதற்கு அனுமதி வழங்கப்படாது விட்டால், தேசிய கீதத்தைத் தமிழர்கள் பாடாமலேயே விட்டு விடுவார்கள் என்று எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

எழும்கேள்வி:- சிறீலங்காவின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பின் வரிகளில் ஏதாவது ஒன்று சுமந்திரனுக்கு ஞாபகத்தில் உள்ளதா?

                                                                             *****************

செய்தி:- ரணிலின் ஆட்சியில் வழங்கப்பட்ட சொகுசு பங்களாவை விட்டு தானாகவே வெளியேற இரா.சம்பந்தன் முன்வர வேண்டும் என்று ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

எழும்கேள்வி:- குறித்த பங்களாவை வயோதிபர் மடமாகக் கருதி நிரந்திரமாகச் சம்பந்தர் தங்கி விடுவார் என்று சிறீலங்கா அரசாங்கம் அஞ்சுகின்றதோ?

111

                                                                          *****************
செய்தி:- இந்தியப் படைகளின் காலத்தில் காணால்போன தனது தம்பியை இப்பொழுதும் தான் தேடுவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- சூளைமேட்டுப் படுகொலை வழக்கில் இவரைத் தேடும் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உதவி செய்ய மாட்டார்களா?                                                               

                                                                            *****************
செய்தி:-தனது இறுதிக் காலத்தில் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா கைவிட்டு விட்டார். அவரது கல்லறையில் உதயசூரியன் சின்னம் தான் பொறிக்கப்பட்டுள்ளது என்று எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- ஆனந்தசங்கரி ஐயாவுடன் புளியம்பொக்கணைக்கு சென்று உடும்புக்கறி தின்பதற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் ஆசைப்படுகின்றாரோ?

                                                                           *****************
செய்தி:-ஆங்கிலப் புத்தாண்டு, தைப் புத்தாண்டு, சித்திரைப் புத்தாண்டு என்று மூன்று தடவைகள் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.

எழும்கேள்வி:- ஓராண்டில் மூன்று ஆண்டுகளைத் தமிழர்கள் இழக்கின்றார்களோ?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு

111