செய்திகளும் எழும் கேள்விகளும்???

புதன் பெப்ரவரி 05, 2020

செய்தி:- ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குடுமிப்பிடிச் சண்டை இடம்பெறுவதாக எக்காளமிடுபவர்கள், அரசாங்கத்திற்குள் புகையத் தொடங்கியிருக்கும் மோதல்களை அலட்சியம் செய்வதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- இப்படித் தான் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பார்களோ?

                                                                            *****************
செய்தி:- கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் பயணிகள் அல்லாதோர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

எழும்கேள்வி:- பயணிகள் மூலமாகவும் கொரொனா வைரஸ் பரவும் என்பது நாட்டை ஆளும் மாதனா முத்தாக்களுக்குத் தெரியாதோ?

                                                                       *****************
செய்தி:- தன்னைக் கொல்ல முயன்றவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் சூளுரைத்துள்ளார்.

எழும்கேள்வி:- தென்னிந்திய திருச்சபை நடாத்தும் ஆராதனைகளில் யேசுநாதரின் போதனைகள் பற்றி இவர் வழங்கும் பொழிப்புரைகள் எல்லாம் ‘ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடி’ என்ற வரையறைக்குள் வருகின்றனவோ?

                                                                      *****************
செய்தி:- முன்னாள் போராளிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் காட்டிக் கொடுப்பதாக விநாயமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் துரோகி கருணா கூறியுள்ளார்.

எழும்கேள்வி:- இதைத் தான் சாத்தான் வேதம் ஓதுகின்றது என்பார்களோ?

                                                                        *****************
செய்தி:- இந்தியக் குடியுரிமையைப் பெறும் தகுதி ஈழத்து இந்துக்களுக்கு இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஸ் ஜோசி கூறியுள்ளார்.
 

எழும்கேள்வி:- வல்லரசுக் கனவில் மிதந்தவாறு பிச்சைக்கார நாடாகத் திகழும் இந்தியாவின் குடியுரிமை தமக்கு வேண்டும் என்று ஈழத்து இந்துக்கள் கேட்டார்களா?

                                                                           *****************
செய்தி:- ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலை சென்று தரிசனம் முடித்து வந்த மறுநாள் குடிப்பதற்கென்று தான் வைத்திருந்த மதுபானத்தை ஒளித்து வைததற்காக தனது சகோதரியைப் பக்தர் ஒருவர் கொன்றுள்ளார்.

எழும்கேள்வி:- மலையில் இருந்து இறங்கிய பின்னர் சாமிக்கு கலை வந்திருக்குமோ?

                                                                    *****************

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு