செய்திகளும் எழும் கேள்விகளும்?

புதன் பெப்ரவரி 26, 2020

செய்தி:- இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடனில் இவ்வாண்டு மீளளிக்க வேண்டிய 169.7 மில்லியன் டொலரை கால தாமதாக செலுத்த இந்தியப் பிரதமரின் அனுமதியைத் தான் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிட்டும் என்று நம்புவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 

எழும்கேள்வி:-  மகிந்த ராஜபக்சவை உவமையாகக் கொள்ளும் எதிர்காலப் பார்வையுடன் தான் ‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று இராமாயணத்தில் கம்பர் எழுதிவைத்தாரோ?

                                                                  *****************
செய்தி:- தமிழ் மக்களின் ஆணையை ஒரு நாளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீறியதில்லை என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:-  அப்ப அடுத்த தீபாவளிக்குள் சமஸ்டித் தீர்வு கிடைத்து விடுமா?

                                                               *****************
செய்தி:-வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகத் திருகோணமலை மாவட்டத்தில் தன்னைக் களமிறக்குமாறு ஊடக ஜாம்பவான் எனப்படும் நடேசபிள்ளை வித்தியாதரன் அவர்கள் விடுத்த கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

எழும்கேள்வி:-  தமிழீழ தேச விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் 20,000 பேர் தன்னுடைய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டுப் போராளிகளாக மாறியவர்கள் என்று பீற்றிக் கொண்ட வித்தியாதரனால் தனது எழுத்துக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி விட முடியாதா என்ன?

                                                                   *****************
செய்தி:- கிறிஸ்தவர்களுக்கு மேற்குலக நாடுகளும், முகமதியர்களுக்கு அரபு நாடுகளும், பெளத்தர்களுக்கு சிங்கள அரசும் பக்கபலமாக உள்ள நிலையில் சைவர்களுக்கு மட்டும் யாருமில்லை என்று ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- மறவன்புலவு சச்சிதானந்தத்தை இந்தியாவும் கைவிட்டு விட்டதா?

                                                           *****************
செய்தி:- தனது தலைமைத்துவத்தை ஏற்று எதிர்வரும் தேர்தலில் இதயச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட ரணில் விக்கிரமசிங்க இணங்கினால் அவருக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தரலாம் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ரணிலுக்கு யாருமே வாக்களிக்கப் போவதில்லை என்று சஜித் உறுதியாக நம்புகின்றாரோ?

                                                                       *****************
செய்தி:- சஜித்தின் ஆதரவாளர்கள் யானைச் சின்னத்தைக் கைவிட்டால் வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகத் தான் களமிறங்கப் போவதில்லை என்று நவீன் திசநாயக்க அறிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- சஜித்தின் தந்தை பிரேமதாசாவின் அதிபர் கனவுக்கு தனது தந்தை காமினி திசநாயக்கா இடையூறு விளைவித்தது போல் தானும் முட்டுக் கட்டை போடலாம் என்று நவீன் திசநாயக்க நம்புகின்றாரோ?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு