செய்திகளும் எழும் கேள்விகளும்...?

சனி டிசம்பர் 14, 2019

செய்தி:-  இந்திய அரசாங்கத்துடன் புரிதலின்மை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இனி வரும் காலங்களில் வெளிப்படைத் தன்மையோடு தங்களின் அரசாங்கம் நடந்து கொள்ளும் என்று சிங்கள அதிபர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:-  அப்படி என்றால் கடந்த காலத்தில் வெளிப்படைத் தன்மையின்றித் தான் இந்தியாவோடு தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நடந்து கொண்டது என்பதைக் கோத்தபாய ஒப்புக் கொள்கின்றாரா?
                                                                                           *****************
செய்தி:-  இலங்கைக்கான சீனத் தூதுவராகத் தான் பதவி வகித்த பொழுது ஆண்டுதோறும் வெறும் நாற்பதுனாயிரம் சீனச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்து சென்றதாகவும், தற்பொழுது அது இரண்டரை இலட்சமாக உயர்ந்திருப்பதாக சீன சிறப்புப் பிரதிநிதி வூ ஜியாங்க்ஹாவோ சிங்களப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

எழும்கேள்வி:-  ஆண்டு தோறும் இரண்டரை இலட்சம் சீனச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றார்கள் என்பதற்காகக் கொழும்பில் உள்ள வீதிப் பெயர்ப் பலகைகள் சீன மொழியில் எழுதப்படுகின்றன என்றால், முழுச் சீனர்களும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தால் நாட்டின் கதி என்னவாகும்?

111
                                                                                          *****************
செய்தி:-  தனது அரசியல் பயணத்தைத் தான் இன்னமும் முடிக்கவில்லை, மீண்டும் தான் எழுச்சி கொள்வேன் என்று முன்னாள் சிங்கள அதிபர் மைத்திரிபால சிறீசேன அறிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- மகிந்த ராஜபக்சவின் பாணியில் அடுத்த அதிபர் தேர்தலில் தனது சகோதரரைக் களமிறக்கிப் பிரதமராகத் தான் பதவியேற்பதற்குச் சிறீசேன திட்டமிடுகின்றாரோ?

                                                                                           *****************
செய்தி:-  வெள்ளை சிற்றூர்தியில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரை சிறீலங்கா காவல்துறைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர விடாமல் அவரை சுவிஸ் தூதுவர் தடுத்து வைத்திருப்பதாக கோத்தபாய ராஜபக்சவின் நண்பரும், பிவித்ரு யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

எழும்கேள்வி:- குறித்த சுவிஸ் தூதரகப் பணியாளரை மீண்டும் கடத்திக் காணாமல் ஆக்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் திட்டமிடுகின்றதோ?

                                                                                    *****************
செய்தி:-  தமிழ் மக்களுக்கு அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படுவதை பெரும்பான்மையர்களான சிங்கள மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் நெறிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கான சரத்துக்களை அமுல்படுத்த முடியாது என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- இதை எல்லாம் கோத்தபாய ராஜபக்ச கூறித் தான் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? எந்தக் காலத்திலும் தங்களுக்கு எந்த அதிகாரத்தையும் சிங்களம் வழங்காது என்பது தமிழர்களுக்குத் தெரியாதா என்ன?

                                                                                 *****************
செய்தி:-  இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதிலேயே இந்தியாவின் பாதுகாப்புத் தங்கியுள்ளது என்று முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

எழும்கேள்வி:- காலம் காலமாக எல்லோரும் அரைத்துப் புளித்துப் போன மாவை எத்தனை காலத்திற்குத் தான் விக்னேஸ்வரனும் அரைக்கப் போகின்றார்?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு