செய்திகளும் எழும் கேள்விகளும்...?

வெள்ளி டிசம்பர் 27, 2019

செய்தி:-ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவி தனக்கு வழங்கப்படாது விட்டால், பிரதமர் வேட்பாளர் நியமனம் தேவையில்லை என்று சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி:- தான் பிரதமராகப் போவதில்லை என்பது ஆளுக்குத் தெரிந்து விட்டதோ?
 

                                                  *****************
செய்தி:- சம்பிக்க ரணவக்கவின் சாரதியின் மனைவி, பிள்ளைகளை தாங்கள் கடத்தவில்லை என்றும், அவர்கள் தாமாகவே நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு காவல்துறை வாகனத்தில் ஏறி மறுநாள் இறங்கிச் சென்றார்கள் என்றும் சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

எழும்கேள்வி:- இதைத் தான் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று தமிழ்நாட்டில் கூறுவார்களோ?

                                                   *****************
செய்தி:- தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தனது தாயாரின் மாமன் என்று புதிய குண்டொன்றை எம்.ஏ.சுமந்திரன் போட்டுள்ளார்.

எழும்கேள்வி:- அப்படி என்றால் உடும்புக்கறி தின்பதற்காக இவரும் அடிக்கடி புளியம்பொக்கணைப் பக்கம் செல்வாரோ?

                                               ******************
செய்தி:- கடத்தப்பட்ட தமது உள்நாட்டுப் பெண் அதிகாரியை சிறீலங்கா அரசாங்கம் இப்பொழுது கைது செய்திருப்பது நாட்டில் சட்ட ஆட்சியைக் கேள்விக் குறியாக்கி இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

1111

எழும்கேள்வி:- இவ்வளவு நாளும் சிறீலங்காவில் நிகழ்ந்தது காட்டாட்சி என்ற ஞானம் இப்பொழுது தான் சுவிஸ் அரசாங்கத்திற்குப் பிறக்கின்றதோ?

                                                     *****************
செய்தி:- சுற்றுச் சூழலின் நலன் கருதி இனிமேல் நெகிழிப் புட்டிகளில் (பிளாஸ்ரிக் போத்தல்) அடைக்கப்பட்ட தண்ணீரைத் தனது செயலகத்தில் அருந்துவதற்குத் தடை விதிப்பதாகவும், தண்ணீர் அருந்துவோர் கண்ணாடிக் குவளைகளையே பயன்படுத்த வேண்டும் என்று சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

எழும்கேள்வி:- தடையை மீறுவோர் வெள்ளை சிற்றூர்தியில் கடத்தப்படுவார்களோ?

                                                    *****************
செய்தி:- தேர்தலில் வெற்றி பெற்றமைக்காகத் தமிழ் மக்களுக்குப் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நன்றி தெரிவித்தமைக்காக பொதுநலவாய அமைப்பில் இருந்து சிறீலங்கா வெளியேற வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஓமல்பே சோபித்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எழும்கேள்வி:- விழுந்து மீசையில் மண்படுவதை விட, மீசையை வழித்து விட்டால் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று கூறலாம் என்று தேரர் கருதுகின்றாரோ?

-தெய்வமகள்-

நன்றி: ஈழமுரசு