செய்தித்தாள்கள் விலக்குக்குத் தடை கோரிய வழக்கு!

வியாழன் ஏப்ரல் 09, 2020

கொரானா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரானா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு, ஊரடங்கு காலத்தில் செய்தித்தாள்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில் செய்தித்தாள்களுக்கு விலக்களிக்கும் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், செய்தித்தாள் நிறுவனங்கள் இணையதளங்கள் மூலமாகச் செய்திகளை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் வாதிடுகையில், “ காகிதத்தில் கரோனா வைரஸ் 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும் என்பதால், செய்தித்தாள்களுக்கு விலக்களித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். செய்தித்தாள்களை வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வதால் விநியோகிக்கும் நபர்களுக்கு கொரானா தொற்று இருக்கும் பட்சத்தில் அது எளிதாக பரவ வாய்ப்பிருக்கிறத. இந்தக் காரணங்களுக்காக செய்தித்தாள் விநியோகத்திற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும்'' என்றார்.

இந்த வாதத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசுத் தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ''செய்தித்தாள் மூலம் கொரானா பரவுவதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. செய்தித்தாள் விநியோகத்திற்கு தடை விதிப்பது அத்தியாவசியத் தேவைகளுக்கு தடை விதிப்பது ஆகும்'' என்று வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற வழக்கு கோப்புகள் அனைத்தும் காகிதத்தில்தான் உள்ளன. பணம் காகிதம்தான். அனைத்து மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில், காகிதம் மூலம் கொரானாபரவலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.