“சஹ்ரான் பயங்கரவாதியல்ல” என மைத்திரிக்குச் சொல்லப்பட்டதா?

வியாழன் செப்டம்பர் 17, 2020

தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதி காவல் துறை பரிசோதகருமான நிலந்த ஜெயவர்தன, “தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஒரு தீவிரவாதி என தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக” முன்னாள் ஜனாதிபதி சிறிசேன குறிப்பிட்டதை மறுத்தார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை பிரதிநிதித்துவபடுத்தும் சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையின் போதே ஜெயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி சிறிசேன குறித்த தனியார் தொலைக்காட்சி நடத்திய அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளி காட்சி ஒன்றை சட்டத்தரணி காண்பித்தார். அந்தக் காணொளி சஹ்ரான் ஹாசிம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஒரு தீவிரவாதி என மட்டுமே தனக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சிறிசேன தெரிவிப்பதைக் காண்பித்தது.

இதனை நீங்கள் ஏற்றுக்கொளகின்றீர்களா எனக் கேட்கப்பட்ட போது, அதனைத்தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த நிலாந்த, சஹ்ரானின் இஸ்லாமிய அரசு என்ற கோட்பாட்டைப் பிரச்சாரப்படுத்துவதாகவும், அது நாட்டுக்கு மிகப் பெரும் ஆபத்து என்பதை பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கும் தேசிய பாதுகாப்புச் சபைக்கும் தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

“நான் சஹ்ரானை விபரிக்க பயங்கரவாதி எனும் பதத்தை பயன்படுத்தாமிலிருந்திருக்கலாம். ஆனால் அவர் இஸ்லாமிய இராச்சிய சித்தாந்தத்தை முன்னெடுப்பதாகத் தெளிவாகச் சொன்னேன். எல்லோருக்கும் ஐஎஸ் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு எனத் தெரியும்” என அவர் சுட்டிக்காட்டினார்.