சீமான் கருத்துக்கு பல பிரிவுகளின் கீழ் வழக்கு!

திங்கள் அக்டோபர் 14, 2019

ராஜீவ் காந்தி கொலை குறித்துப் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சீமான் நேற்று (13), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் கருத்து தெரிவிக்கும் போது, "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்´´ என்று கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்துப் கருத்து தெரிவித்த சீமான்மீது, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி பொலிஸில் நேற்று இரவு புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று விக்கிரவாண்டி பொலிஸார் சீமான் மீது, வன்முறையைத் தூண்டுதல் (153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சீமானின் இந்தப் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.