சீமானுக்கு ஒரு திறந்த மடல் - கலாநிதி சேரமான்

வெள்ளி மார்ச் 26, 2021

முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. 

 

ஜேக்கப்பின் பேரனே.

 

செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே.

 

சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள் ஈடுபட்டிருக்கும் சூழலில் உங்களுக்கு மடல் எழுதி சிரமம் கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம்.

 

தொப்பை வண்டியோடும், வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத்துப்பாக்கிகளுடனும் காவலுக்கு நிற்கும் தமிழக காவல்துறையினரை ஆட்சிக்கு வந்ததும் மீன்பிடிப்படகுகளில் அனுப்பி சிங்களப் படைகள் மீது போர் தொடுத்துக் கச்சதீவை மீட்க வேண்டும்.

 

சிங்களக் கடற்படையால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பதற்கு உங்கள் கொப்பாட்டனார் இராசராச சோழன் வழியில் கப்பற் படை அமைக்க வேண்டும்.

 

காவிரி ஆற்று நீரைத் தடுக்கும் கர்நாடகாவுக்குள் உங்கள் ஓட்டனார் இராசேந்திர சோழன் வழியில் பாய்மரக் கப்பல்கள் சகிதம் நுழைந்து ரெட்டிமார்மீது போர் தொடுத்து காவிரி ஆற்று நீரை தமிழகத்திற்குள் பாய்ச்ச வேண்டும்.

 

கண்ணகியை நிந்தித்த வடநாட்டு மன்னர்களான கனக, விசயர்கள் மீது படையெடுத்து, அவர்களின் தலையில் கங்கை நீரையும், கல்லையும் தமிழகம் வரை சுமக்க வைத்து பத்தினித் தெய்வத்திற்கு சிலையமைத்துக் குடமுழுக்குச் செய்த சேரமான் செங்குட்டுவன் வழியில் கேரளநாடு மீது போர் தொடுத்து முல்லைப் பெரியாற்றைத் திறந்து விட வேண்டும்.

 

தமிழகம் எங்கும் பதுக்கி வைக்கப்படிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.

 

இலஞ்சம் பெறும் அரசாங்க அதிகாரிகளை இந்தியன் படத்தில் கமலகாசன் போட்டுத் தள்ளியது போல் என்கௌண்டர் செய்து இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும்.

 

அப்பப்பா!

 

இப்படி எத்தனையோ பணிகளை முதலமைச்சராக முடிசூடியதும் செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்கும் உங்களால் இந்த மடலைப் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதே கடினம் தான்.

 

அதை விட தமிழக முதலமைச்சராகியதும் தமிழீழத்தை மீட்பதற்கு என்று இளைஞர் படை ஒன்றைத் திரட்டி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தமிழீழத்தை மீட்டெடுத்துத் தரப் போவதாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் ஜெனீவாவில் வைத்து எங்களிடம் நீங்கள் கூறிய அம்புலிமாமா கதையையும் நாங்கள் மறக்கவில்லை.

 

எங்களை விடுவோம்.

 

சீமான் தமிழக முதலமைச்சராகி விட்டால், அடுத்தது டில்லி ஆட்டம் காணும், இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெரும் திருப்பம் ஏற்படும், சீனாவின் கொல்லைப்புறமாக மாறி வரும் இலங்கைத் தீவில் தமிழீழம் என்றொரு நாடமைத்து அதை இந்தியாவின் அரணாக சீமான் மாற்றுவார் என்றெல்லாம் நீங்கள் விடும் கதைகளை நம்பி உங்களுக்குக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கும் ஏமாந்த சோணகிரிகளாக வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் சிலர் இருக்கும் போது, நீங்கள் எப்படி அம்புலிமாமா கதைகளைக் கூறாமல் வாளாவிருக்க முடியும்?

 

இட்லிக்குள் ஆமைக்கறியை எப்படி ஒளித்து வைத்து சாப்பிடுவது என்று பொட்டு அம்மானின் அடுக்களையில் பயிற்சி எடுத்தவர் நீங்கள்.

 

யாருமே நெருங்க முடியாத எங்கள் சூரியத்தேவனின் மணிக்கட்டில் சலிக்கும் வரை உங்கள் விரலால் தட்டிப் பார்த்து ஏ.கே-74 ஏ.கே-47 அல்ல  சுட்டுப் பழகியவர் நீங்கள்.

 

நீங்கள் வன்னிக்குச் சென்றது எல்லாளன் படம் எடுக்க உதவி புரிவதற்காக என்பதையும், அங்கு நீங்கள் நின்ற நாட்களில் பெருமளவானவற்றை ஒளிப்படக் கருவிகளோடு நீங்கள் கழித்ததையும் அறியாத எம்மவர்களில் பலர், நீங்கள் ஏதோ மாதக்கணக்கில் எங்கள் தேசியத் தலைவரோடு சர்வதேச அரசியல் பேசிக் கொண்டிருந்ததாக நினைப்பதில் தவறில்லை தானே?

 

ஆனாலும் ஒரு நெருடல்.

 

தமிழக முதலமைச்சராக வேண்டுமென்று நீங்கள் துடிப்பதும், அதற்காகக் கதையளப்பதும் இந்திய அரசியலில் சகஜமானவை தான்.

 

ஆனால் அதற்காக எங்கள் தலைவன் பிரபாகரனின் வாரிசாக, அவர் ஏந்திய விடுதலைத் தீவட்டியை இப்பொழுது நீங்கள் ஏந்திச் செல்வதாக பிம்பம் எழுப்ப முற்படுவதில் என்ன நியாயம் உண்டு?

 

ராஜபக்சேயின் மைத்துனருடன் வணிகக் கூட்டணி வைத்திருந்த லைகாவின் கத்தி படத்தை வெளியிடுவதற்குத் தமிழகத்தில் எழுந்த தடைகளைத் தகர்த்தெறிவதற்கு என்று லைகாவிடம் பெட்டியும், புட்டியும் வாங்கிய நீங்கள், எங்கள் சூரியத்தேவனின் வாரிசாக உங்களை முன்னிறுத்துவது அந்தப் பெருந்தலைவனைக் கொச்சைப்படுத்தும் செய்கையாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

 

ஈழப்போரின் இறுதிக் கணங்களில் உங்கள் தம்பி சந்தோசுடன் பேசிய தளபதி சூசை, சீமானிடம் முன்னெடுக்கச் சொல்லுங்கோ. வைகோவையும் முன்னெடுக்கச் சொல்லுங்கோ’ என்று கூறியது எமது விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தைத் தமிழ்நாட்டில் பலப்படுத்துமாறு விடுக்கப்பட்ட ஆணை என்பதை மறந்து தமிழ்நாடு முழுவதும் எமக்கு எதிரிகளை நீங்கள் தேடிக் கொண்டிருப்பதன் நோக்கம் தான் என்ன?

 

முதலில் அண்ணன் வைகோ ஒரு தமிழன் இல்லை என்று வசைபாடினீர்கள். 

 

பின்னர் தமிழ்நாட்டின் மாபெரும் புரட்சியாளனாகிய தந்தை பெரியாரைக் கன்னடன் என்று இனவாதம் பேசித் திராவிட ஆதரவாளர்களை அந்நியப்படுத்தினீர்கள்.

 

மூழ்கும் கப்பலில் இருந்து ஓடித்தப்ப முற்படும் எலிகள் போன்று உங்கள் கட்சியை விட்டு உங்கள் தம்பிகளான இராசீவ் காந்தியும், கல்யாணசுந்தரமும், துரைமுருகனும் தலைதெறிக்க ஓடிய கதைகளை விடுவோம்.

 

முப்பாட்டன் முருகனின் பேரனே,

 

எங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும் தேவை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தேவை, பாரதிய ஜனதா கட்சியும் தேவை, காங்கிரஸ் கட்சியும் தேவை, கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேவை.

 

எங்களுக்கு நீங்களும் தேவை, அண்ணன் வைகோவும் தேவை, கொளத்தூர் மணி அண்ணனும் தேவை, பழ.நெடுமாறன் ஐயாவும் தேவை.

 

எங்களுக்கு உதவிக் கரம் நீட்ட ஸ்டாலின் வந்தாலும் அவர் கையை இறுகப் பற்றுவோம்.

 

எடப்பாடி கை தந்தாலும் எட்டிப் பிடிப்போம்.

 

மோடி வந்து அணைத்தாலும் புளகாங்கிதம் கொள்வோம்.

 

ஏன் நாளை ராகுல் காந்தி வந்து தனிநாடு பற்றிக் கதைத்தாலும் அவரோடும் பேசுவோம்.

 

ஏனென்றால் நாங்கள் நாதியற்றவர்கள்.

 

நாடற்றவர்கள்.

 

உலகெங்கும் அலைந்துழலும் ஏதிலிகள்.

 

நாங்கள் போராடுவது எங்களின் தேச விடுதலைக்காக.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதோ தாய்த் தமிழக உறவுகளின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக.

 

இரண்டையும் நீங்கள் போட்டுக் குழப்புவதில் என்ன தான் நியாயம் உண்டு?

 

நீங்கள் யாரிடமிருந்தாவது பெட்டிகளையும், புட்டிகளையும் பெறுங்கள்.

 

முடிந்தால் எங்களுக்காகக் குரல் கொடுங்கள்.

 

முடியவில்லை என்றால் எங்களை விட்டு விடுங்கள்.

 

சத்தியத்தின் சாட்சியாக நின்று மாவீரர்களின் தியாக வரலாறு எங்களை வழிகாட்டும்.

 

நீங்கள் எங்களுக்கு உதவினாலும், உதவா விட்டாலும் எங்கள் தலைவனின் அந்த சத்திய வழியில் நின்று என்றோ ஒரு நாள் சுதந்திரத் தமிழீழத்தை நாங்கள் அடைந்தே தீருவோம்.

 

தமிழ்நாட்டிலும் சரி, அகில இந்திய தேசத்திலும் சரி எங்களுக்கு எதிரிகள் தேவையில்லை. 

 

இது தான் எங்களுக்கு எங்கள் சத்தியத் தலைவன் காட்டிய வழி.