சீன அதிபர் புறப்பட்டதால் இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

சுற்றுப்பயணத்தை முடித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டுச் சென்றதை தொடர்ந்து, பாதுகாப்பு வளையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இருவரும் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டனர். இரண்டு தலைவர்களின் வருகையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விமான நிலையம் முழுவதும்காவல் துறையின்  கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்துக்குள் வரக்கூடிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்று, அங்கிருந்து சந்திப்பு நடைபெற்ற கோவளம் மற்றும் மகாபலிபுரத்துக்கு காரில் சாலை மார்க்கமாக பயணம் செய்தார். ஆனால், சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சந்திப்பு நடைபெற்ற இடங்களுக்கு காரில் சாலை மார்க்கமாகவே பயணம் செய்து திரும்பினார். இதனால், சீன அதிபர் பயணம் செய்த, சென்னை விமான நிலையம் கிண்டி வரையிலான ஜிஎஸ்டி சாலை, சர்தார் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை முழுவதையும் காவல் துறை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சீன அதிபர் தங்கிய ஓட்டலுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சாலைகளில் காவல் துறை  தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சீன அதிபரின் பயணத்துக்கு சுமார் ஒருமணி நேரம் முன்னதாக ஒவ்வொரு சாலையிலும் இருபுறங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்தநேரத்தில் அப்பகுதியில் இருக்கும் சுரங்க நடைபாதைகளிலும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. சீன அதிபரின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் சாலைகளில் காவல் துறையின்  கடுமையான கட்டுப்பாடுகள், போக்குவரத்து நிறுத்தம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று பிறபகலில் சீன அதிபர் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர் பாதுகாப்பு வளையத்தில் இருந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில், சீன அதிபர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யாதது ஏன் என்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “சீனா, அமெரிக்கா தலைவர்களின் பாதுகாப்பு என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களுடைய பாதுகாப்பு முறைக்கும், நம்முடைய பாதுகாப்பு முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அவர்களுடைய வாகனங்களையே பயன்படுத்துவார்கள். சீனாவில் இருந்து கார்கள் மட்டும் தான் வந்தன. ஹெலிகாப்டர் வரவில்லை. அதனால்தான் சீன அதிபர் காரில் பயணம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தங்கிய ஓட்டலில், சீன அதிபர் தங்காததற்கும் இதுவே முக்கிய காரணம்” என்றனர்.