சீன அதிபருடன் மோடி சந்திப்பு!

வெள்ளி ஜூன் 14, 2019

கிர்கிஸ்தான் நாட்டில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங்கை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பி‌‌ஷ்கேக் நகரில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று பி‌‌ஷ்கேக் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

பி‌‌ஷ்கேக் நகருக்கு போய்ச்சேர்ந்த அவரை அந்த நாட்டின் துணை பிரதமர் ஜமீர் பேக் அன்புடன் வரவேற்றார்.

வரவேற்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

பிரதமராக நரேந்திர மோடி கடந்த 30-ந் தேதி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர், அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது இதுவே முதல் முறை.

பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றிக்கு ஜின்பிங் பாராட்டு தெரிவித்தார். அதற்கு மோடி, ‘‘இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது உங்கள் வாழ்த்துச்செய்தி கிடைத்தது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறினார்.

நாளை (15-ந் திகதி) ஜின்பிங்கின் 66-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு இந்திய மக்கள் அனைவர் சார்பிலும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையில் தொடர்ந்து அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டது. சீன வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் பேசப்பட்டது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து தடை செய்ய சீனா ஆதரவு அளித்தது பற்றியும் இரு தலைவர்களும் பேசினர்.

மேலும், இரு தரப்பு உறவை புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியதின் தேவையை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர்.ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிய பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பினார். ‘‘பாகிஸ்தானுடன் இந்தியா சமாதான உறவையே விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை’’ என ஜின்பிங்கிடம் மோடி தெரிவித்தார்.

அத்துடன், ‘‘பயங்கரவாதத்தை ஒடுக்கி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும். ஆனால் தற்போது அது நடப்பதாக தெரியவில்லை. பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் முறை சாரா உச்சி மாநாட்டுக்கு வருமாறு சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஜின்பிங்கும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு வர தயாராக இருப்பதை உறுதி செய்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், ‘‘சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தேன். இந்த சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்திய, சீன உறவின் முழுப்பரிமாணத்தையும் உள்ளடக்கியதாக எங்கள் பேச்சு அமைந்தது’’ என கூறி உள்ளார்.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாகவும் மோடியும், ஜின்பிங்கும் பேசினர்.

இதுபற்றி இந்திய வெளிறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே குறிப்பிடுகையில், ‘‘ பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, உலகளாவிய நிலவரம் குறித்து பொதுவாக பேசப்பட்டது. அப்போது சீன, அமெரிக்க வர்த்தக உறவு பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் இவை குறித்து விரிவாக பேச நேரம் இல்லை’’ என்று கூறினார்.

‌ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பேக்கோப் விருந்து அளித்தார்.

‌ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று முடிகிறது.