சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை!

புதன் சனவரி 27, 2021

இந்திய சீன எல்லையான கல்வாண் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, டிக்-டாக், வி சாட் உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ம் திகதி மத்திய அரசு தடை விதித்தது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும், பொது நிலைத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது. கேம்கார்டு , விடேட், அலிஎக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செயலிகளுக்கு நவம்பர் மாதத்தில் தடை அமல்படுத்தப்பட்டது.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 220 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயலி நிறுவனங்கள் அளித்த விளக்கம், திருப்திகரமாக இல்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரத்தில் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.