சீனாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்வு!

வெள்ளி சனவரி 31, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட மொத்தம் 18 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கொரோனா பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அனைத்து நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை மையங்களை நிறுவியுள்ளன. நேற்றைய தகவலின்படி இந்த கொரோனா வைரசினால் சீன நாட்டில் மட்டும் 170 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 9 ஆயிரத்து 692 பேர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.