சீனாவில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவு !

சனி சனவரி 18, 2020

சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனா கடந்த 1949-ம் ஆண்டு முதல் கம்யூனிச நாடாக உள்ளது. இந்த அரசு தொடங்கியது முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் சட்டமாக்கப்பட்டது. அன்று முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது. அதனால் குழந்தைகள் பாதிப்பு விகிதம் ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

சமீபத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 1 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் (14.65 மில்லியன்) குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் குழந்தைகள் விகிதம் அதிகரிக்கவில்லை.

இதனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.