சீனாவின் பட்டுப்பாதையில் இத்தாலியும் இணைந்தது

ஞாயிறு ஏப்ரல் 07, 2019

சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையயழுத்திட்டது. ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது.

ஜி-7 நாடுகள் அணியைச் சேர்ந்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்துள்ளது. ரோம் நகரில் சீன அதிபர் சீ ஜின்பிங் இத்தாலியப் பிரதமர் குய்செப் கான்டேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, 5 முதல் 7 பில்லியன் ஈரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையயழுத்தாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி முதல் 26ம் திகதி வரை சீன அதிபர் ஜின்பிங் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் மொனோகோ ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, சீனாவின் பொருளாதார வழித்தடத் திட்டத்தினால் (belt and road initiative), மற்ற நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பான இரண்டாவது கூட்டத்தை, சீனா அடுத்த மாதம் நடத்த உள்ள நிலையில், மைக் பாம்பேயோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் கடந்த 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாம்பேயோ பேசியதாவது: நேர்மையான முறையிலும், சர்வதேச விதிமுறைகளுக்கு உள்பட்டும் பல்வேறு விவகாரங்களில் சீனாவுடன் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆனால், பொருளாதார வழித்தடத் திட்டம் மூலம், மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை அதிகரிக்க உள்ளதாக சீனா தெரிவித்து வருகிறது.

ஆனால், மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் கடன்களை வழங்கி, அந்நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் உள்நோக்கம் ஆகும். இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

தென்சீனக் கடல் முழுவதையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், உலக நாடுகள் பலவற்றிலும் சீனா துறைமுகங்களைக் கட்டி வருகிறது. இவற்றின் மூலம், அவர்கள் திறமையானவர்கள் என்பதை மட்டும் உலக நாடுகளுக்கு சீனா தெரிவிக்க முயலவில்லை. மாறாக, அந்த நாடுகளின் பாதுகாப்புக்கும் அவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

சீனாவின் இத்தகைய அச்சுறுத்தலை மற்ற நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு, நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

முக்கியமாக ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனாவின் உள்நோக்கம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில், அந்நாடுகளுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார வழித்தடத் திட்டம் மூலம், ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளை சாலை வழியாகவும், கடல் வழியாகவும் இணைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், அந்நாடுகளுடனான வர்த்தகத் தொடர்பு அதிகரிக்கும் என்று சீனா தெரிவித்து வருகிறது.

இத்திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் சிறீலங்கா இந்தத் திட்டத்திற்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கடன்களையும் சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாகப் பெற்று வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

இதுஇவ்வாறிருக்க, சீனா உடனான வர்த்தக பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடந்துவருகின்றது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகள் விதித்தன.

111

இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள்.

அப்போது, இருவரும் வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1ம் திகதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர்.

இது 90 நாட்களுக்கு நீடிக்கும். இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவினர் வர்த்தக பிரதிநிதி ரொபேர்ட் லைட்ஹைசர், வர்த்தக அமைச்சர் ஸ்டீவன் மனுசின் தலைமையில் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையயாட்டி டிரம்ப், வா´ங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது நாடு பெரிதான விதத்தில் செயல்படுகிறது என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இதர நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடுகையில், அமெரிக்காதான் முன்னணியில் உள்ளது. உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா முன்னகர்த்தி செல்கிறது. அமெரிக்க டொலரின் மதிப்பு வலிமையாக உள்ளது என்றார்.

நன்றி: ஈழமுரசு